அறந்தாங்கி அருகே வைரிவயல் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: கிராமமக்கள் வலியுறுத்தல்!அறந்தாங்கி அருகே வைரிவயல் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில் வைரிவயல் கண்மாய் உள்ளது. இந்த கிராமத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அறந்தாங்கி நகர்பகுதியில் இருக்கக்கூடிய சாக்கடை கழிவு நீர் கண்மாயில் கலப்பதால் விவசாயிகள் வைரிவயல் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு இந்த நீரை பயன்படுத்த முடியாமல் இருந்தனர். மேலும் இந்த கண்மாய் நீரை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நோய் தொற்று மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து வைரிவயல் கிராமமக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். இதையடுத்து அறந்தாங்கி தாசில்தார் தலைமையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சமாதான கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஓராண்டில் கண்மாயில் சாக்கடை கழிவு நீர் கலப்பதை சரி செய்து விடுகிறோம் என நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் விவசாயிகள் விளை நிலத்தில் விவசாயம் செய்யாமல் காத்திருந்தனர். ஆனால் இதுநாள் வரைக்கும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அப்பகுதி கிராமமக்கள் கூறுகையில், கண்மாயில் கடல் போல் நீர் இருந்தாலும் அதை பயன்படுத்த முடியாமல் இருக்கின்றோம். குறிப்பாக ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அவிழ்த்து விடவும் மிகவும் அச்சப்படுகின்றோம். இந்த நீரை அருந்திய மாடுகள் நோய்வாய்ப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் போது விவசாயிகள் தண்ணீரில் காலை வைத்தால் அரிப்பு உள்ளிட்ட நோய்கள் உண்டாகி இறப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments