மின் இணைப்புக்கான பெயர் மாற்ற முகாம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு-மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் அறிவிப்பு!



மின் இணைப்புக்கான பெயர் மாற்ற முகாம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில்கொண்டு, மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்பேரில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கென “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்”, கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி முதல் ஒரு மாதகாலம் வரை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைபெற்று வந்தது.

இந்த “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” தொடங்கி வைக்கப்பட்ட நாள் முதல் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 995 வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம் குறித்து பொதுமக்களிடையே கிடைக்கப்பெற்ற அதிகப்படியான வரவேற்பினை கருத்திற்கொண்டும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காலஅவகாசம் 24-ந் தேதி (நேற்று முன்தினம்) முடிவடைவதாலும், இந்த “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” மேலும் ஒரு மாதகாலம் அதாவது அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் அனைவரும் இந்த கால நீட்டிப்பு அவகாசத்தை உரிய முறையில் பயன்படுத்தி, சிறப்பு பெயர் மாற்றம் முகாம் மூலம் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments