கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா திரளானவர்கள் கலந்து கொண்டனர்




கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

கந்தூரி விழா

கோட்டைப்பட்டினத்தில் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்கா உள்ளது. தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மாலை ரதம் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் தினந்தோறும் இரவு தர்காவில் பாத்திஹா (குர்ஆன்) ஓதப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் 10-வது நாளான நேற்று கந்தூரி விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு கூட்டுக்கொட்டகையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தாரை தப்பட்டை முழங்க முக்கிய வீதிகள் வழியாக சென்று தர்காவை வந்தடைந்தது.

பின்பு ராவுத்தர் அப்பா அடக்கஸ்தலத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டது. இந்த கந்தூரி விழாவிற்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல மதத்தவர்களை சேர்ந்த திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜமாத்தார்கள், கந்தூரி கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

மதநல்லிணக்கம்

ராவுத்தர் அப்பாவும், முனியய்யாவும் உற்ற தோழராக இருந்துள்ளனர். இதனால் ராவுத்தர் அப்பா அடக்கஸ்தலம் அருகிலேயே முனியய்யா கோவிலும் அமைந்துள்ளது. தர்கா எவ்வாறு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோ அதே போல் முனியய்யா கோவிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜையும் நடைபெறும். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்கா அமைந்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments