அதிராம்பட்டினம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் அலையாத்திக்காட்டில் வறண்டு கிடக்கும் நீர்நிலைகள் வெப்பத்தின் தாக்கத்தால் இடம் பெயரும் வெளிநாட்டு பறவைகள்
அதிராம்பட்டினம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் அலையாத்திக்காட்டில் நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. வெப்பத்தின் தாக்கத்தால் வெளிநாட்டு பறவைகள் இடம் பெயர்ந்து வருகிறது.

அலையாத்தி காடுகள்

தஞ்சை மாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை மறவக்காடு, கரிசக்காடு, கருங்குளம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் உள்ளிட்ட கடற்கரையோர பகுதியில் அலையாத்தி காடுகள் அமைந்துள்ளது.

இந்த அலையாத்திக் காடுகள் கடல் அரிப்பை தடுக்கவும், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து கடற்கரையோர கிராம மக்களை பாதுகாக்கவும், கடல் வாழ் உயிரினங்களான மீன், இறால் உள்ளிட்ட பல உயிரினங்களின் உணவு ஆதாரமாகவும் உள்ளது.

வெளிநாட்டு பறவைகள்

அலையாத்தி மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகள் மக்கி கடலில் கலப்பதால் இறால் மற்றும் பிற மீன்களுக்கு உணவாக பயன்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடங்கும் மழையால் அலையாத்திக்காட்டுப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி, கடும் குளிருடன் பறவைகளுக்கு ஏற்ற இயற்கை சூழல் காணப்பட்டு வரும். இதனால் ஏராளமான வெளிநாட்டு பறவகைள் இங்கு வருகின்றன.

இலங்கை, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, பர்மா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பூநாரை, கூலக்கடா, செங்கால்நாரை, நீர்க்காகம், ஊசிவால் வாத்து, வெண்கொக்கு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பறவைகள் வர தொடங்கும்.

கோடை மழை

அப்போது இந்த அலையாத்தி காட்டு பகுதிகள் பறவைகள் சரணாலயம் போல் காட்சி அளிக்கும். பின்னர் கோடைக்காலம் தொடங்கும் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து பறவைகள் கொஞ்சம், கொஞ்சமாக அலையாத்திக்காட்டு பகுதியில் இருந்து வெளியேறிவிடும்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோடை மழை பெய்ததால் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இருந்தது. இதனால் ஏப்ரல் மாதத்தில் அலையாத்திக்காட்டில் இருந்து வெளியேறும் பறவைகள், இந்த மழையால் மேலும் சில காலம் இப்பகுதியில் தங்கியிருந்தது.

வறண்டு கிடக்கும் நீர்நிலைகள்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிராம்பட்டினம் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் காலத்தில் சுட்டெரித்தது போல் தற்போது கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

வெயிலின் தாக்கம் காரணமாக அலையாத்திக் காட்டுப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு வெடிப்புகள் ஏற்பட்டு உள்ளது. அலையாத்திக்காட்டில் வழக்கமாக உள்ள குளிர்ச்சியான சூழ்நிலை மாறி தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பல்வேறு வெளிநாட்டு பறவைகள் மீண்டும் தங்களது சொந்த நாட்டிற்கே திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments