ஜி20 உச்சி மாநாடு இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பாவை இணைக்கும் ரயில், கப்பல் போக்குவரத்து திட்டம் தொடக்கம்
ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவையும், மத்திய கிழக்கு நாடுகளையும், ஐரோப்பாவையும் ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா - மத்திய கிழக்கு நாடுகள் - ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றை ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "உண்மையில் இது ஒரு பெரிய விஷயம். பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் இந்த ஜி20 உச்சி மாநாட்டின் மையமாக உள்ளது. இந்த மாநாடு இன்றைய தேவைக்கான பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறது.

நிலையான, நெகிழ்ச்சியான உள்கட்டமைப்பை உருவாக்குதல், தரமான உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குதல் மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதல் ஆகியவை இந்த மாநாட்டில் பேசப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இந்த நோக்கத்துக்காக நாங்கள் ஒன்றிணைந்தோம். அமெரிக்காவும் எங்கள் கூட்டாளிகளும் இதை நிஜமாக்குவதற்கான முக்கிய வழிகளை மேற்கொண்டுள்ளோம். உள்கட்டமைப்புக்கு தீர்வு காண நாங்கள் வேலை செய்கிறோம். குறைந்த - நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் முதலீடுகளின் தாக்கத்தை அதிகப்படுத்த விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

ஜி20 உச்சி மாநாட்டின் மற்றொரு முக்கிய அம்சமாக, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் முன்னிலையில் இந்தக் கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.


இந்தக் கூட்டணியில் தொடக்க உறுப்பு நாடுகளாக அர்ஜென்டினா, வங்கதேசம், பிரேசில், இந்தியா, இத்தாலி, மொரிஷியஸ், தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் இடம்பெற்றுள்ளன. பார்வையாளர்களாக கனடாவும், சிங்கப்பூரும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாசு இல்லாத மின் உற்பத்தி முறை, பாதுகாப்பான மின் உற்பத்தி, சுழலும் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை மையமாகக் கொண்டு இந்த கூட்டணி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வாக டெல்லி ஜி20 பிரகடனம் அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளதாக மாநாட்டின் தலைவரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் நோக்கம்

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடமானது மத்திய கிழக்கு நாடுகளை ரயில்வே மூலம் இணைக்கவும், துறைமுகங்கள் மூலம் இந்தியாவுடன் இணைக்கவும் நோக்கமாக உள்ளது. 

பொருளாதார வழித்தடத்தின் கட்டுமானம் சர்வதேச வர்த்தகத்திற்கு பெரும் பலன்களைத் தரப்போகிறது. இது கப்பல் போக்குவரத்துக்கான நேரத்தையும் செலவையும் குறைக்கும். 

இந்த நடைபாதையில் ரயில்வே, கப்பல் நெட்வொர்க்குகள் மற்றும் சாலை போக்குவரத்து வழிகள் ஆகியவை அடங்கும். ரயில் மற்றும் கப்பல் வழித்தடமானது எரிசக்தி பொருட்கள் உட்பட நாடுகளுக்கு அதிக வர்த்தகம் செய்ய உதவும். இந்த நடைபாதையின் காரணமாக, மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஐரோப்பா ஒன்றாக இணைக்கப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments