கிராம ஊராட்சிகளில் அக்.2 முதல் இணையவழியில் மட்டுமே கட்டிட அனுமதி - ஊரக வளர்ச்சித் துறை உத்தரவு
 கிராம ஊராட்சிகளில் கட்டிட அனுமதிக்கான விண்ணப்பம் மற்றும் கட்டணங்கள் அனைத்தையும் அக். 2-ம் தேதி முதல் இணையவழியிலேயே பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு, ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது, சட்டப்பேரவையில் துறை அமைச்சர் “ஊரகப் பகுதிகளில் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதிகள் ஆகியவை ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் மூலம் வழங்கப்படும். கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களும் இணையவழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும்” என்றார்.

கிராம ஊராட்சிகளில் உருவாக்கப்படும் மனைப் பிரிவுகளுக்கான அங்கீகாரம், அந்த மனைப் பிரிவுகளை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வுசெய்து, நகர ஊரமைப்பு இயக்ககம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் தொழில்நுட்ப முன் அனுமதி, இதர துறைகளின் தடையின்மைச் சான்று அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படுகிறது.

முன் அனுமதி பெறாத புதிய மனைப் பிரிவுகளுக்கு கிராம ஊராட்சியால் ஒப்புதல் தர இயலாது. கட்டிட அனுமதியைப் பொறுத்தவரை, ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

ஊராட்சிகளில் கட்டப்படும் கட்டிடங்களின் தளப் பரப்பு மற்றும் இதர காரணிகளின் அடிப்படையில் கிராம ஊராட்சிகளுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, குடியிருப்புக் கட்டிடங்கள் என்றால் 10 ஆயிரம் சதுர அடிக்கு மிகாமலும், 8 குடியிருப்புகளுக்கு மிகாமலும், 12 மீட்டர் உயரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். தரைத் தளம் வாகன நிறுத்துமிடமாக இருந்தால், ஸ்டில்ட் மற்றும் 3 தளங்கள் வரை அனுமதி அளிக்க முடியும். தரைத் தளம் குடியிருப்பாக இருந்தால், தரைத் தளம் மற்றும் 2 தளங்களுக்கு அனுமதி அளிக்க முடியும். வணிகக் கட்டிடங்களின் பரப்பு 2 ஆயிரம் சதுரடிக்கு உட்பட்டிருந்தால், கிராம ஊராட்சிகள் அனுமதி அளிக்கலாம்.

இந்நிலையில், வரும் அக். 2-ம் தேதி முதல் அனைத்து கட்டிட அனுமதிகளும் கிராம ஊராட்சிகளால் அதிகாரப் பகிர்வுக்கு உட்பட்ட அளவில் இணையவழியில் மட்டுமே தரப்பட வேண்டும். கிராமப் பகுதிகளில் கட்டிட அனுமதி வழங்கும் பொறுப்பு கிராம ஊராட்சி செயல் அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நகர் ஊரமைப்பு எல்லைக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் வரும் அக். 2-ம் தேதிக்குப் பின்னர் கட்டிட அனுமதிக்கான விண்ணப்பமும் இணையவழியிலேயே பெற வேண்டும்.

கள ஆய்வுக்கான நேரம் குறித்த தகவல்களையும் இணையவழியிலேயே அளிக்கலாம். கட்டிட அனுமதிக்கான கட்டணத்தை செலுத்த, விண்ணப்பதாரருக்கு கேட்புத் தொகையை இணையவழியே அனுப்ப வேண்டும். மேலும், கிராம ஊராட்சியில் எந்த ஒரு கட்டணத்தையும் அக். 2-ம் தேதிக்குப் பின்னர் ரொக்கமாகப் பெறக்கூடாது. இணையவழியில் மட்டுமே பெற வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments