கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்: இல்லத்தரசிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1 அனுப்பி சோதனை




கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடங்கி வைக்கப்பட உள்ள நிலையில், பயனாளிகள் பட்டியலில் உள்ள இல்லத்தரசிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1 அனுப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.1 அனுப்பி சோதனை

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி (நாளை) வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

இத்திட்டத்தில் பயன் பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்களை தேர்வு செய்துள்ள தமிழ்நாடு அரசு அந்த இல்லத்தரசிகளின் வங்கிக்கணக்கில் நாளை திட்டம் தொடங்கப்பட்ட உடன் ரூ.1,000 வரவு வைக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்களின் வங்கிக் கணக்கு சரியானது தானா? என்பதை பரிசோதிக்கும் வகையில் அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1 வரவு வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு குறுஞ்செய்தியும் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படுகிறது. ஆனால், இந்த 1 ரூபாயானது பரீட்சார்த்த முறையாக சோதனை செய்து பார்க்கப்படுகிறதே தவிர அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

இதே போன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட விவரம் மற்றும் நிராகரிக்கப்பட்ட விவரங்களும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

காஞ்சீபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் இன்று (வியாழக்கிழமை) மாலையே திருவள்ளூர் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் சென்று தங்குகிறார். இதே போன்று, சென்னையில், ராயப்பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும், கொளத்தூரில் அமைச்சர் சேகர்பாபுவும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் தங்கள் பகுதிகளில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments