தொண்டியில் படகு சவாரி தொடங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி மிக நீண்ட கடற்கரையை கொண்ட நகரமாக விளங்கி வருகிறது. பண்டைய காலத்தில் தொண்டி துறைமுகமாக விளங்கியதால் தொண்டி கடற்கரை அழகை ரசிப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு பொழுது போக்குவதற்கான சிறப்பு அம்சங்கள் ஏதும் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

தொண்டியில் ஜெட்டி பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தில் தான் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று கடலின் அழகை ரசிப்பதும், புகைப்படங்கள் எடுப்பதும், பாலத்தில் அமர்ந்து பொழுது போக்குவதும் வழக்கம். இந்த பாலம் மிக நீண்ட காலத்திற்கு முன் கட்டப்பட்டதால் சேதமடைந்து ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் உள்ளது. இதனால் பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல ேகார்ட்டு தடை விதித்துள்ளது.

இதனால் இங்கு வருகிற சுற்றுலா பயணிகள் கடற்கரை ஓரத்தில் நின்று செல்பி எடுத்து கொண்டு கடல் அழகை ரசித்தவாரே சென்று விடுகின்றனர். பொழுது போக்குவதற்கான அம்சங்கள் இல்லாததால் இப்போது சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து கொண்டே வருகிறது.

கிடப்பில் கிடக்கும் திட்டம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொண்டி வளாகத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சுற்றுலாத்துறை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கான சிறிய அளவிலான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் உள்ளூர் பொதுமக்கள் அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்து குழந்தைகளை விளையாட விட்டு சிறிது நேரம் பொழுதை கழித்துச் செல்கின்றனர். தொண்டி பேரூராட்சி நிர்வாகம் தொண்டி கடற்கரையில் பூங்கா, நடைமேடை சிறு குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்களுடன் சிறிய அளவிலான பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்துவதற்கு திட்ட அறிக்கைகள் தயார் செய்து அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளது. ஆனால் இதுநாள் வரை அதற்கான நிதி ஆதாரம் கிடைக்கப்படாததால் அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

படகு சவாரி

இதனால் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுற்றுலாத்துறை தொண்டி கடற்கரையில் படகு சவாரி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் இப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் தொண்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து கடலின் அழகை ரசிப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

எனவே அழகப்பா பல்கலைக்கழகம் சுற்றுலாத்துறை மூலம் இங்கு படகு சவாரியை தொடங்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொண்டி பொதுமக்கள், தொண்டி மக்கள் நல வளர்ச்சி சங்கம், பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments