தொடர் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் அருவிகளில் உற்சாக குளியல்




குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்றும் வீசும். இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவித்து அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு சீசன் ஜூன் மாதம் முழுவதும் பொய்த்து விட்டது. ஜூலை மாதம் சுமார் 15 நாட்களே சீசன் இருந்தது. அதன் பிறகு மழை பெய்யாமல் அருவிகள் வறண்டன.

ஆனால் சீசன் காலம் முடிந்த பிறகும் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்றும் குற்றாலத்தில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இடையிடையே இதமான வெயிலும் அடித்ததோடு குளிர்ந்த காற்றும் வீசியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

சீசன் காலம் முடிந்தும் அருவிகளில் தண்ணீர் விழுவதால் தென் மாவட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் குற்றாலத்தில் குவிந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments