மகளிர் உரிமைத்தொகை பணம் கிடைக்காதது ஏன்? இணையதளத்தில் தெரிந்து கொள்ள தமிழக அரசு ஏற்பாடு




மகளிர் உரிமைத்தொகை பணம் கிடைக்காதது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் அரசு இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளது.

மகளிர் உரிமைத்தொகை

தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த திட்டம் கடந்த 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தொடங்கப்பட்டது. காஞ்சீபுரத்தில் நடந்த விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகைக்கான ஆணை மற்றும் அதற்கான பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு இந்த மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பித்தவர்களில் 65 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 35 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இணையதளம்

இதற்கிடையே மகளிர் உரிமைத்தொகை்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்றை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

அரசு உருவாக்கி உள்ள இந்த புதிய இணையதளம் மூலம் மகளிர் உரிமைத்தொகை தனக்கு எதனால் கிடைக்கவில்லை என்பதை தாங்களாகவே தெரிந்து கொள்ளலாம். அதாவது அந்த இணையதளத்தில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் கொடுத்த ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதை வைத்து என்ன காரணத்துக்கான பணம் வரவில்லை என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஓரிரு நாளில்...

மகளிர் உரிமைத்தொகை குறுஞ்செய்தி கிடைப்பதில் நடக்கும் குளறுபடியை தவிர்க்க தமிழக அரசு இந்த புதிய இணைய தளத்தை தொடங்கி உள்ளது. நேற்று மதியம் முதல் பயன்பாட்டுக்கு வந்த இந்த புதிய இணையதள பணிகள் இன்னும் முழுமையடைவில்லை.

அந்த பணிகள் இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும். அதன்பிறகு எந்தவொரு சிக்கலும் இல்லாமல் மகளிர் உரிமைத்தொகை வராதது ஏன் என்பதை மட்டும் தெரிந்து கொள்ளலாம்.

மேல்முறையீடு கட்டணம் கிடையாது

இதுதொடர்பான மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்க தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகத்தான் விண்ணப்பிக்க முடியும். அப்படி மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுதொடர்பாக அந்தந்த இ-சேவை மையங்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments