வறட்சியால் மகசூல் பாதிப்பு: 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.560 கோடி இழப்பீடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வறட்சியால் மகசூல் பாதிக்கப்பட்டதால் தமிழகத்தில் 6 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.560 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பயிர் காப்பீட்டு திட்டம்

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பயிர் காப்பீட்டு திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2022-23-ம் ஆண்டில் இந்த திட்டம் சென்னையை தவிர்த்து 37 மாவட்டங்களை உள்ளடக்கி 14 தொகுப்புகளில் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், இப்கோடோக்கியோ, பஜாஜ் அலையன்ஸ், எச்.டி.எப்.சி எர்கோ மற்றும் ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் சம்பா நெல் பயிரில், 11.20 லட்சம் விவசாயிகளால் 24.45 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டது.

வேளாண் பயிர்கள் பாதிப்பு

மொத்த காப்பீட்டு கட்டணத்தில் தமிழ்நாடு அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக ரூ.1,375 கோடியும், ஒன்றிய அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.824 கோடியும் விவசாயிகளின் பங்குத் தொகையாக ரூ.120 கோடியும் என மொத்தம்

ரூ.2,319 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. 2022-2023-ம் ஆண்டு சம்பா பருவ நெல் சாகுபடியில் 46 லட்சம் டன் உற்பத்தி அடையப்பட்ட போதிலும், வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்த காரணத்தால் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட மிதமான வறட்சியால் 3 லட்சத்து 52 ஆயிரத்து 797 ஏக்கர் பரப்பளவில் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.181.40 கோடி தொகையை தமிழ்நாடு அரசு ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 275 விவசாயிகளுக்கு கடந்த 4-ந்தேதி வழங்கியது.

ரூ.560 கோடி இழப்பீடு

இதனை தொடர்ந்து தற்போது பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 37 மாவட்டங்களில் வறட்சி, வெள்ளம், புயல், பருவம் தவறிய மழை போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான மகசூல் இழப்புக்காக இழப்பீட்டு தொகையாக மொத்தம் ரூ.560 கோடி வழங்கப்பட உள்ளது.

இந்த இழப்பீட்டு தொகை சுமார் 6 லட்சம் தகுதி வாய்ந்த விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments