தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்த தொடர் முயற்சி கடல்சார் வாரிய கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு




தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சென்னையில் நடைபெற்ற கடல்சார் வாரியக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

கடல்சார் வாரியக் கூட்டம்

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 95-வது வாரியக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை பல்வேறு வழிகளில் மேம்படுத்திட தமிழ்நாடு அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கடலூர் துறைமுக மேம்பாடு, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு விரைவுப் பயணிகள் படகு போக்குவரத்து, கன்னியாகுமரி படகு அணையின் மேடை நீட்டிப்பு, விவேகானந்தர் நினைவுப் பாறையையும், திருவள்ளுவர் சிலை பாறையையும் தொங்கு பாலம் மூலமாக இணைத்தல், துறைமுக மேம்பாட்டாளர்களை ஈர்த்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, கடல்சார் வாரிய வருவாயை பெருக்கும் நோக்கில் துறைமுக கொள்கையை உருவாக்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறு துறைமுகங்களை...

தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்துவதற்கும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் வளர்ச்சிக்கும், தாங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர் எஸ்.நடராஜன், போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி, தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் இ.சுந்தரவள்ளி, நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணன் உன்னி, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கட்ராம் சர்மா, சென்னை வணிக கடல்துறை (துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சம்) மத்திய அரசின் பிரதிநிதி கே.எம்.ராவ், மாநில துறைமுக அலுவலர் கேப்டன் எம்.அன்பரசன், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கடலோர கமாண்டர் ரவிக்குமார் தினகரா, கடலோர காவல் படை தலைவர் எம்.எஸ்.ரவாத், மற்றும் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments