நெல்லை - எழும்பூர், சென்னை சென்டிரல் - விஜயவாடா உள்பட 9 வந்தே பாரத் ரெயில்கள் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார் நெல்லை - எழும்பூர், சென்னை சென்டிரல் - விஜயவாடா உள்பட 9 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார்.




இந்திய ரெயில்வேயில் அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த விரைவு ரெயில்கள் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன.

பல்வேறு மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயுமாக 25 வழித்தடங்களில் ஏற்கனவே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளன.

புதிதாக 9 ரெயில்கள்

எனவே மேலும் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்களை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அதன்படி புதிதாக 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன.

இதில் முக்கியமாக நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரெயில் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்டிரலுக்கு (ரேணிகுண்டா வழியாக) புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

இவற்றை தவிர 

காசர்கோடு-திருவனந்தபுரம், 
உதய்பூர்-ஜெய்ப்பூர், 
ஐதராபாத் (காச்சிகுடா)-பெங்களூரு (யஸ்வந்த்பூர்), 
பாட்னா-ஹவுரா, 
ரூர்கேலா-புரி, 
ராஞ்சி-ஹவுரா, 
ஜாம்நகர்-ஆமதாபாத் 

என 9 வழித்தடங்களில் புதிய ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

கொடியசைத்து தொடங்கிவைத்தார்




இந்த ரெயில்களை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். 9 ரெயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தபின் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்போது அவர், இந்த ரெயில்கள் மூலம் 11 மாநிலங்களில் இணைப்பு வசதிகள் அதிகரிக்கும் என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநில மக்கள் இன்று (நேற்று) புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் வசதிகளை பெற்றுள்ளனர்.

இந்த ரெயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை காட்டுகின்றன. வேகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் வளர்ச்சியின் அளவு 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களுடன் சரியாக பொருந்துகிறது.

நாடு முழுவதும் ஏற்கனவே 25 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றுடன் தற்போது கூடுதலாக 9 ரெயில்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

வெகுதொலைவில் இல்லை

இந்தியாவில் வந்தே பாரத் ரெயில்களின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் ஏற்கனவே 1.11 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

9 வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று தொடங்கப்படுவதால், நாடு முழுவதும் சுற்றுலா மேம்படுவதுடன், இணைப்பு வசதியும் கணிசமாக மேம்படும்.

நாட்டின் அனைத்து பகுதிகளையும் வந்தே பாரத் ரெயில்கள் மூலம் இணைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

இந்தியாவின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மிகவும் நம்பகமான சக பயணியாக இந்திய ரெயில்வே உள்ளது. இங்கு ஒரு நாளில் ரெயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை, பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம் ஆகும்.

வளர்ந்த இந்தியா

இந்திய ரெயில்வே மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் நிகழும் மாற்றங்கள் வளர்ந்த இந்தியாவை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு மாநில மக்களின் வளர்ச்சியும் அவசியம்.

முந்தைய அரசுகள் ரெயில்வேயை நவீனமயமாக்குவதில் அதிக கவனம் செலுத்தாதது வருத்தமளிக்கிறது. ஆனால் தற்போது நமது அரசு ரெயில்வேயின் மாற்றத்திற்காக பாடுபடுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ள பல ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் உருவாகும் அனைத்து ரெயில் நிலையங்களும் ‘அமிர்த பாரத நிலையங்கள்' என அழைக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

முதல்-மந்திரிகள், கவர்னர்கள்

நிகழ்ச்சியில் பேசிய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த 9 ஆண்டுகளில், ரெயில்வே அசாதாரண மாற்றங்களை அடைந்துள்ளது என தெரிவித்தார்.

எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப ரெயில்வே துறை புதுப்பிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இன்று ரெயில் நிலையங்கள் புதிய வசதிகளுடன் தூய்மையாக உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

9 வந்தே பாரத் ரெயில்களின் தொடக்க விழாவையொட்டி 9 ரெயில் நிலையங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. அவற்றில் முதல்-மந்திரிகள், கவர்னர்கள், மத்திய மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பலர் அந்த ரெயில்களில் பயணம் செய்தும் மகிழ்ந்தனர். இந்த ரெயில்களின் முதல் பயணத்தின்போது, வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் கூடி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

கவர்னர், மத்திய மந்திரி பயணம்

நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து சரியாக மதியம் 1 மணி அளவில் ‘வந்தே பாரத்’ ரெயில் சென்னைக்கு தனது பயணத்தை தொடங்கியது.

இந்த ரெயிலில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி எல்.முருகன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பயணம் செய்தனர். மேலும் ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் ஆர்வமாக பயணம் செய்தனர். ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் இனிப்பு வழங்கினார். மேலும் அதில் பயணம் செய்த அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

இதுதவிர 1 முதல் 3-வது பிளாட்பாரம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று ‘வந்தே பாரத்’ ரெயிலுக்கு கையசைத்து ஆரவாரத்துடன் சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர். இதேபோல் மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் வந்தே பாரத் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

6 நாட்கள் இயங்கும்

நெல்லை-சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், செவ்வாய்க்கிழமைகளை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரெயில்கள் நெல்லை-சென்னை இடையேயான 653 கி.மீ. தூரத்தை 7.50 மணி நேரத்தில் அடையும் என தென்னக ரெயில்வே கூறியுள்ளது.

அந்தவகையில் நெல்லையில் இருந்து தினமும் காலை 6 மணிக்கும், எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கும் கிளம்புகிறது. விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் மற்றும் தாம்பரத்தில் ரெயில் நின்று செல்லும்.

இந்த ரெயில் சேவை நெல்லை மற்றும் மதுரை பகுதிகளில் சுற்றுலா வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை வழங்குவதுடன், வர்த்தகர்கள் உள்பட பல்வேறு துறையினருக்கு மிகுந்த உதவிக்கரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்துக்குள் இயக்கப்படும் 2-வது வந்தே பாரத் ரெயில் இதுவாகும். ஏற்கனவே சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments