`தலைமுடி, தாடியை வெட்டிட்டு, பள்ளிக்கு வா..!' - கண்டித்த ஆசிரியர்; விபரீத முடிவெடுத்த மாணவர்!
தலைமுடி, தாடியை வெட்டிவிட்டு பள்ளிக்கு வருமாறு ஆசிரியர் அறிவுறுத்திய நிலையில், மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர், எப்போதும் தலைமுடி அதிகமாகவும், தாடியுடனேயே பள்ளிக்குச் சென்றிருக்கிறார். பள்ளி ஆசிரியர்கள் முடியையும், தாடியையும் குறைத்துவிட்டு பள்ளிக்கு வருமாறு மாணவரை அவ்வப்போது கண்டித்து வந்திருக்கின்றனர். ஆனாலும், அந்த மாணவர் தலைமுடியை வெட்டாமலேயே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தலைமுடியைக் குறைக்காமல் நேற்று பள்ளிக்குத் தேர்வு எழுதச் சென்ற அந்த மாணவரை, பள்ளித் தலைமையாசிரியர் தலைமுடியையும் தாடியையும் வெட்டிவிட்டு பிற்பகல் ஒரு மணிக்கு மேல் தேர்வு எழுத வருமாறு கூறி, பள்ளியிலிருந்து அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. 

ஆனால், மாணவரின் பெற்றோருக்கு இது குறித்து பள்ளி நிர்வாகம் எந்தத் தகவலும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது

மாணவர் நேற்று இரவாகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், அது தொடர்பாக விசாரித்திருக்கின்றனர். அப்போதுதான், மாணவரை முடிவெட்டாததால் ஆசிரியர்கள் வீட்டுக்கு அனுப்பிய தகவல் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, உறவினர்கள் ஊர் முழுக்க மாணவனைத் தேட ஆரம்பித்தனர். அப்போது, பள்ளிக்கு பின்புறமுள்ள மரத்தில் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. (தற்கொலை தீர்வல்ல... #Say_No_To_Suicide) இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மாணவரின் உடலைக் கட்டியணைத்துக் கதறி அழுதனர்.


இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், மாணவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவரின் உறவினர்கள், `மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையிலும் உடலைப் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம்' என்று கூறி, புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அதையடுத்து, நகர டி.எஸ்.பி ராகவி தலைமையிலான போலீஸார், மாணவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாலைமறியல்
சம்பந்தப்பட்ட ஆசிரியர்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். தேர்வு நேரத்தில் மாணவர் தலைமுடி, தாடியை வெட்டாததால் பள்ளியைவிட்டு ஆசிரியர்கள் வெளியே அனுப்பிய நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments