புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் விரைவில் தொடக்கம் அதிகாரிகள் தகவல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகள்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை, உபகரணங்கள் வழங்குதல், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தல், சுய தொழில் தொடங்க வசதி உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் தொடங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி இத்திட்டத்தில் முதல் கட்டமாக திருச்சி, தர்மபுரி, தென்காசி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் இத்திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்திலும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

13 வட்டாரங்கள்

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் மாவட்ட அளவில் ஒரு இடத்தில் மட்டும் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் சேவை வட்டார அளவில் கிடைக்கும் வகையில் செயல்படுத்துவது தான் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் ஆகும். வட்டார தலைமையிடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய பராமரிப்பு மையங்கள், நடமாடும் சிகிச்சை வாகனங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும்.

இதன்மூலம் அந்தந்த வட்டாரங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை பெறவும் வசதி ஏற்படுத்தப்படும். இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் நெடுந்தூரம் சிரமத்தோடு பயணிப்பது குறையும். மாற்றுத்திறனாளிகளின் மொத்த எண்ணிக்கையை முழுமையாக கணக்கிட முடியும். மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக பிரத்யேக அலுவலகம் தொடங்கப்படும்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments