பாம்பன் ரயில்வே தூக்குப்பாலத்தை கடக்க நீண்டவரிசையில் அணிவகுத்து வந்து பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த 50 படகுகள்
பாம்பன் தூக்குப்பாலத்தை ஒரே நேரத்தில் 50 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் அணிவகுத்து வந்து கடந்து சென்றன.

பாம்பன் ரெயில் தூக்குப்பாலம்

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் கடலின் நடுவே உள்ள ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்த 3 நாட்களுக்கு மேலாக பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் நேற்று திறக்கப்பட்டது.

இதை தொடர்ந்து வடக்கு கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்தபடி வந்து தூக்கு பாலத்தை கடந்தன. அவை தென்கடல் பகுதி வழியாக கேரள மாநிலம் கொச்சிக்கு செல்கின்றன.

பாறை மீது ஏறிய படகுகள்

தூக்குப்பாலத்தை மீன்பிடி படகுகள் கடந்தபோது 2 படகுகள் ஆழமான பாதையை மாறி ஆழம் குறைவான பகுதிக்கு சென்று பாறை மீது ஏறி நின்றன. இதை தொடர்ந்து உடன் வந்த படகுகளில் கயிறு கட்டி அந்த படகை இழுத்து மீட்டனர்.

இதேபோல் புதுச்சேரியில் இருந்து கேரளா செல்வதற்காக கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாய்மர படகு ஒன்றும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றது.

ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்து சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments