கடந்த ஆட்சியில் 2 ஆயிரம் வழித்தடங்களில் பஸ் சேவை நிறுத்தம்: புதிதாக டிரைவர், கண்டக்டர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் பஸ்கள் இயக்கப்படும் சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தகவல்




கடந்த ஆட்சியில் 2 ஆயிரம் வழித்தடத்தில் பஸ் சேவை நிறுத்தப்பட்டதாகவும், புதியதாக டிரைவர், கண்டக்டர் தேர்வுக்கு பிறகு நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

2 ஆயிரம் பஸ்கள் நிறுத்தம்

சட்டசபையில் கேள்வி நேரத்தில், வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் (தி.மு.க.), கொரோனா காலக்கட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பஸ் சேவை நிறுத்தப்பட்டது. என்னுடைய வேடசந்தூர் தொகுதியில், குறிப்பாக, கொம்பேரிபட்டி மலைப்பகுதிக்கு ஒரே ஒரு அரசு பஸ்தான் போகிறது, தனியார் பஸ்கள் எதுவும் செல்வதில்லை. அதே போல, நாகக்கோணனூர் என்கிற ஊருக்கும் ஒரே ஒரு அரசு பஸ் தான் போகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, நிறுத்தப்பட்ட பஸ்களை எல்லாம் மீண்டும் இயக்க வேண்டும்" என்றார்.

இதற்கு பதில் அளித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

கடந்த ஆட்சி காலத்தில் போதிய டிரைவர், கண்டக்டர்கள் இல்லாத காரணத்தினால் 2 ஆயிரம் வழித்தடங்களில் பஸ்களை நிறுத்தினார்கள். கடந்த 5 ஆண்டுக்காலத்தில் ஒரு புதிய டிரைவர், கண்டக்டர் கூட பணி நியமனம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பஸ்கள் எல்லாம் நிறுத்தப்பட்டன. இப்போது புதிய டிரைவர், கண்டக்டர் பணி நியமனம் செய்வதற்கான பணி தொடங்கப்பட்டு இருக்கிறது.

முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திலே 685 பேர் எடுப்பதற்கு மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. அடுத்தக்கட்டமாக தேர்வு நடைபெற உள்ளன. தேர்வு முடிந்தபிறகு அவர்கள் பணிக்கு வருவார்கள். அதேபோல, மற்ற போக்குவரத்துக்கழகங்களிலும், அடுத்தக்கட்டமாக பணி நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளி-கல்லூரிகளுக்கு...

எனவே, இந்த நடவடிக்கை முடிந்தவுடன், ஏற்கனவே நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் எதெல்லாம் முக்கியமானதோ அந்த வழித்தடங்களை ஆராய்ந்து, மீண்டும் பஸ்கள் இயக்கப்படும். பள்ளிகள், கல்லூரிகள் உள்ள பகுதிகளுக்கு தேவையான பஸ் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் எங்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

ஆகவே, அவ்வழித்தடங்களில் தற்போதுள்ள பஸ்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக தேவைப்படுகின்ற வழித்தடங்களை ஆய்வு செய்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments