திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரூ.23 கோடியில் ரெயில்பாதை மின்மயமாக்கல் பணிக்கு டெண்டர் அடுத்த ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம்




திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரூ.23 கோடியில் ரெயில் பாதை மின்மயமாக்கல் பணிக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தம் உறுதி பெறும் பட்சத்தில் இந்த திட்டத்தை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் அகஸ்தியம்பள்ளி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணி நிறைவு பெற்றது.

இதனையடுத்து கரியாபட்டினம், குரவப்புலம், தோப்புத்துறை மற்றும் வேதாரண்யம் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக இந்த வழித்தடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ரெயில் சேவை தொடங்கியது. தற்போது இந்த வழித்தடத்தில் டெமு ரெயில்கள் இயங்கி வருகிறது.

ரூ.23 கோடியில் மின்மயமாக்கல் பணி

இந்த நிலையில் புதுடெல்லியில் உள்ள ரெயில்வே வாரியம், திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ தூர அகல ரெயில்பாதை, திருவாரூர்-காரைக்குடி இடையே பட்டுக்கோட்டை, அறந்தாங்கி வழியிலான 149 கி.மீ. தூரம் அகல ரெயில்பாதை ஆகிய இரண்டு பாதைகளில் மின்மயமாக்கல் பணிக்கான ஒப்புதலை 2 மாதங்களுக்கு முன்பு வழங்கியது.

இதனையடுத்து திருச்சி ரெயில்வே கோட்டத்தின் கீழ் செயல்படும் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ தூர ரெயில் பாதையின் மின்மயமாக்கல் பணிக்கு தெற்கு ரெயில்வே கட்டுமான அமைப்பால் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்குள்...

ரூ.23 கோடி மதிப்பில் மேல்நிலை சாதனங்கள் வழங்கல், நிறுவுதல், சோதனை மற்றும் இயக்குதலுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளன. டெண்டர்கள் உறுதியான பின்னர் அடுத்த ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் திருச்சி ரெயில்வே கோட்டத்தின் கீழ் செயல்படும் இந்த 2 வழித்தடங்கள் மட்டுமே மின்மயமாக்கப்படாமல் இருப்பதாகவும், திருவாரூர்-காரைக்குடி இடையேயான அகல ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிக்கான டெண்டர் ரெயில்வே கட்டுமான அமைப்பால் விரைவில் கோரப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments