சேதுபாவாசத்திரம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து மீன் வியாபாரிகள் 2 பேர் பலி டிரைவர் உள்பட 6 பேர் காயம்




சேதுபாவாசத்திரம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து மீன் வியாபாரிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். டிரைவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

மீன் வியாபாரிகள்

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் காடந்தகுடியை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 60). அருகில் உள்ள உலககுன்னம் சேகர்(55), கண்ணுக்குடி பரவத்தூர் சக்திவேல்(49), மண்ணங்காடு சொக்கலிங்கம்(60), துவரங்குறிச்சி அசோகன்(48), அதிராம்பட்டினம் மல்லிகா(60), ஒட்டங்காடு ஆறுமுகம்(50). இவர்கள் 7 பேரும் மீன் வியாபாரிகள்.

நேற்று முன்தினம் இவர்கள் 7 பேரும் சரக்கு வேன் மூலம் ஜெகதாப்பட்டினம் சென்று மீன் வாங்கிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக மதுக்கூர் மீன் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றனர். அந்த வேனை பெரியகோட்டையை சேர்ந்த டிரைவர் பாலசுப்பிரமணியன்(28) ஓட்டி சென்றார்.

2 பேர் சாவு; 6 பேர் காயம்

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள அம்மணிச்சத்திரம் கடைவீதி அருகே சென்றபோது டிரைவர் வேனை பிரேக் பிடிக்க முயன்று உள்ளார். ஆனால் வேன், பிரேக் பிடிக்காமல் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் தங்கராஜ், சேகர் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். டிரைவர் உள்பட மற்ற 6 பேரும் லேசான காயம் அடைந்தனர்.

உடனடியாக அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தங்கராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதேபோல் பட்டுக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சேகர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்ற 6 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்த விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments