புதுவையில் செந்நிறமாக கடல் காட்சியளித்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
புதுவையில் செந்நிறமாக கடல் காட்சியளித்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

செந்நிறமாக மாறிய கடல்

புதுச்சேரி கடல் பகுதியில் குருசுக்குப்பம் முதல் காந்தி சிலையின் பின்புறம் வரை கடலோரத்தில் 1 கி.மீ. நீளம், 100 மீட்டர் அகலத்தில் கடல்நீர் நேற்று செந்நிறமாக காணப்பட்டது. அதில் குளோரின் நெடி வீசியது. இதனால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் திகைத்துப் போனார்கள். ஒரேநேரத்தில் கடலின் ஒரு பகுதி செந்நிறமாகவும், மற்றொரு பகுதி நீல நிறமாகவும் இருந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. அதனை கடற்கரைக்கு வந்தவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும் சிலர் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

மீன்கள் செத்து ஒதுங்கின

இதுகுறித்து குருசுக்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறும்போது, ஆரோவில் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் செந்நிறத்தில் கடலில் வந்து கலக்கிறது. அங்கிருந்து அந்த தண்ணீர் வடக்கு நோக்கி கடலின் நீரோட்டத்தில் கலந்து வருகிறது. இது மழைக்காலங்களில் சிறிது சிறிதாக தெரியும். ஆனால் தற்போது சற்று அடர்த்தியாக தெரிகிறது என்று தெரிவித்தனர்.

இதனிடையே கடற்கரையில் சில இடங்களில் மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடந்தன.

வேதியியல் மாற்றம்

இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையில் நேற்று மாலை கடற்கரைக்கு வந்து கடல்நீர் மாதிரியை ஆய்வுக்கு சேகரித்து சென்றனர். காலையில் செந்நிறமாக காட்சியளித்த கடல்நீர், மாலையில் வழக்கம்போல் நீல நிறத்துக்கு மாறி இருந்தது. இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறும்போது, ‘கடல் நீர் மாற்றத்திற்கு ஆரோவில் பகுதிகளில் இருந்து வந்த தண்ணீர்தான் காரணமா? என்பது தெரியவில்லை. கடல் பாசிகளின் வேதியியல் மாற்றத்தால் இதுபோல் மாறி இருக்கலாமா? என்ற சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக தண்ணீர் மாதிரியை எடுத்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்த பிறகே அதற்கான காரணம் குறித்து தெரியவரும்’ என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments