காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை வழியாக இராமேஸ்வரம் - சென்னை இடையே பகல் நேர தினசரி ரயில் இயக்க கோரி மத்திய ரயில்வே மந்திரிக்கு காரைக்குடி தொழில் வணிக கழகத்தினர் கோரிக்கை




ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் காரைக்குடி வழியாக ரெயில் இயக்க வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரிக்கு தொழில் வணிக கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகல் நேர ரெயில்

காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமிதிராவிடமணி, இந்திய ரெயில்வே போர்டு தலைவர், மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வின்வைஷ்ணவ் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தென்கிழக்கு மாவட்டங்களில் வசித்து வரும் சாதாரண மக்கள் பகல் நேரத்தில் சென்னை செல்ல வேண்டுமானால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் காரைக்குடி வழியாக ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கும் பகல் நேரத்தில் ரெயில்கள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னையில் இருந்து ராமேசுவரத்திற்கு பகல் நேரத்தில் ரெயில்கள் இயக்கினால் ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டணம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பயணிகள் இந்த ரெயிலை அதிகளவில் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.

நின்று செல்ல வேண்டும்

அத்துடன் கோவைக்கு நாகூரில் இருந்து திருவாரூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, மதுரை, பழனி, பொள்ளாச்சி வழியாக புதிய ரெயிலும் இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கப்படும் இந்த ரெயிலை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும், டெல்டா பகுதி மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் ராமேசுவரத்தில் இருந்து அஜ்மீர் நகருக்கு செல்லும் விரைவு ரெயிலை பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் வரையிலும் நீட்டிப்பு செய்துள்ள நிலையில் இந்த ரெயிலை காரைக்குடி ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments