புதுக்கோட்டையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் இடம் மாறுகிறதா?




புதுக்கோட்டையில் தற்காலிக பஸ் நிலையம் அமைய தேர்வு செய்யப்பட்ட இடம் மாறுவதாக கூறப்படுகிறது.

புதிய பஸ் நிலையம்

புதுக்கோட்டை நகராட்சியில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் பல சேதமடைந்து காணப்படுகிறது. இதில் ஒரு சில இடங்களில் கான்கிரீட் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனால் கட்டிடங்களை முழுமையாக இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதற்கிடையில் இந்த கட்டுமான பணியின் போது பஸ்களை இயக்க தற்காலிக பஸ் நிலையம் அமைக்க கலைஞர் மகளிர் கல்லூரி எதிரே எழில்நகர் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி வர உள்ளது. அதுவரை தற்போது உள்ள பஸ் நிலையத்தில் பணிகள் தொடங்க வேண்டாம் என பல தரப்பில் இருந்து நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுமக்கள் வந்து செல்லவும், கடை வியாபாரிகளும் பாதிப்படையும் என்பதால் இந்த பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

இடம் மாறுகிறதா?

இந்த நிலையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கும், பஸ்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படும் என போக்குவரத்து துறை வட்டாரத்தில் கூறியதாக தெரிகிறது. இதனால் வேறு இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதில் தற்போது உள்ள புதிய பஸ் நிலையத்தின் பின்பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே அல்லது பஸ் நிலையம் அருகே வீட்டு வசதி வாரியத்தின் பழைய கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு அதில் அமைக்கலாமா? என அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசித்து வருகின்றனர். எதுவாயினும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு தான் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க இடம் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments