கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மின்சார பயன்பாடு, பத்திரப்பதிவும் கண்காணிப்பு ரூ.1,000 பெறும் பெண்கள் பற்றி மாதந்தோறும் ஆய்வு அதிக வருமானம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரத்து செய்ய அரசு உத்தரவு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெறும் பெண்கள் பற்றி மாதந்தோறும் ஆய்வு செய்து, அதிக வருமானம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டால் ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 மகளிர்உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டது.

ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் அந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் என்றும் பெயரிடப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில், காஞ்சீபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கு ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெறுகின்றனர். இதுவரை 2 மாதம் ரூ.1,000 தொகை வரவு வைக்கப்பட்டு உள்ளது.

ரத்து செய்ய உத்தரவு

இந்தநிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பற்றி மாதந்தோறும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் அதற்கான தகுதியை இழந்திருந்தால் அவர்களுக்கான உரிமைத்தொகையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாதந்தோறும் ஆய்வு

ஒவ்வொரு மாதமும் இறப்பு தொடர்பான பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் தொடர்பான தகவல்கள், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய தரவுகள், வருமான சான்று தொடர்பான தகவல்கள், 4 சக்கர மற்றும் கனரக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்பது பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும்.

காலாண்டுக்கு ஒரு முறை பொது வினியோக திட்டம் தொடர்பான தரவுகள், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்பட்ட விவரங்கள், நில உடமை (பத்திரப்பதிவு) தொடர்பான தகவல்களை சரிபார்க்க வேண்டும். அரையாண்டுக்கு ஒரு முறை தொழில் வரி செலுத்தப்பட்ட தரவுகள், மின்சார பயன்பாட்டு தரவுகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.

குறுஞ்செய்தி மூலம் தகவல்

வருமான வரி செலுத்தப்பட்ட மற்றும் தாக்கல் செய்யப்பட்ட தரவுகள், சொத்து வரி குறித்த தரவுகளை ஆண்டுதோறும் சரிபார்க்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அடங்கிய தரவுகளை பராமரிக்கும் அரசுத் துறைகள் தொழில்நுட்ப தொடர்பு வழியாக நிகழ்நேரத்தில் அல்லது உரிய கால முறையில் தகவல் தரவுகளை கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட இணையதளத்திற்கு பகிர்ந்து அளிக்க ஆணையிடப்பட்டு உள்ளது.

இத்தகவல்கள் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளின் பட்டியலை இணையதளத்தில் தானாக புதுப்பிக்க வேண்டும். தானாக புதுப்பிக்கப்படுதல் மூலமாக நீக்கம் செய்யப்படும் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும்.

மேல்முறையீடு

இதுகுறித்து பயனாளிகள் முறையீடு செய்ய விரும்பினால் இணையதளம் மூலம் மேல்முறையீடு செய்யலாம். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் இணைய வழியாக பதிவு செய்யாமல் விடுபட்ட இறந்த பயனாளிகளின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வழியாக பெற்று ஒவ்வொரு மாதமும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நீக்கம் செய்யப்பட வேண்டிய பயனாளிகளின் பட்டியலை இணையதளம் வழியாக ஒவ்வொரு மாதமும் 2-ந் தேதிக்குள் சமூக பாதுகாப்பு திட்ட ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

நிராகரிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு அனுப்பிவைக்கப்படும். இவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், நிராகரிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments