தீபாவளிக்கு புதுகை வழியாக சிறப்பு ரயில்களை இயக்கக் கோரிக்கை




தீபாவளிப் பண்டிகைக்கு புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.

சென்னையிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேசுவரத்துக்கு 2 தினசரி ரயில்கள், காரைக்குடிக்கு 1 தினசரி ரயில், செங்கோட்டைக்கு வாரத்தில் 3 நாட்கள் என ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஜூலை மாதம் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி துளிகளிலேயே சென்னையிலிருந்து புதுக்கோட்டை வழியாக இயங்கக் கூடிய அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் தீா்ந்தன.

தற்போது தீபாவளிக்கு முதல் 3 நாட்கள் (நவ. 9,10,11) சென்னையிலிருந்து புதுக்கோட்டை வழியாக இயங்கக் கூடிய அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் 200 கணக்கில் காத்திருப்புப் பட்டியலில் உள்ளன.

குறிப்பாக, சென்னையிலிருந்து ராமேசுவரத்துக்கு மாலை 5.45 மணிக்கு புறப்படும் சேது ரயில் மற்றும் செங்கோட்டைக்கு இரவு 8.20 மணிக்கு புறப்படும் சிலம்பு ரயில்களில் டிக்கெட்டுகள், காத்திருப்புப் பட்டியலில் கூட இல்லாமல்- முன்பதிவு செய்ய சாத்தியமில்லாத நிலைக்குச் சென்றுவிட்டன.

இதனால் எந்த ரயில்களிலும் டிக்கெட் உறுதியாகாத புதுக்கோட்டை மாவட்ட மக்கள் புதுக்கோட்டை வழித்தடத்தில் தெற்கு ரயில்வேயின் சிறப்பு ரயில்களின் அறிவிப்பை எதிா்நோக்கியுள்ளனா்.

கடந்த வாரம் ஆயுத பூஜை விடுமுறைக்கு யாரும் எதிா்பாராத வண்ணம் புதுக்கோட்டை வழியாக சென்னை சென்ட்ரல்- காரைக்குடி இடையே ஆயுத பூஜைசிறப்பு ரயில் ஒன்றை தெற்கு ரயில்வே இயக்கியது. அது புதுக்கோட்டை பயணிகள் பலருக்கும் பெரிதும் உதவியது.

மேலும், கடந்த ஆண்டு தீபாவளி விடுமுறைக்கு புதுக்கோட்டை வழித்தடத்தில் தாம்பரம்- திருநெல்வேலி- சென்னை எழும்பூா், நாகா்கோவில்-தாம்பரம் (ஒரு வழி ரயில்), கொச்சுவேலி- தாம்பரம்- கொச்சுவேலி ஹம்சபாா் உள்ளிட்ட போதுமான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

அதுபோல நிகழாண்டும் புதுக்கோட்டை பயணிகள் நலன் கருதி திருநெல்வேலி- தாம்பரம், கொச்சுவேலி- தாம்பரம், ஆயுத பூஜைக்கு இயக்கப்பட்ட சென்னை சென்ட்ரல்- காரைக்குடி உள்ளிட்ட ரயில்களை புதுக்கோட்டை வழியாக இயக்க வேண்டும் என்றும், கடைசி நேர பரபரப்பை தவிா்க்கும் வகையில், சிறப்பு ரயில் அறிவிப்பை வண்டி புறப்படுவதற்கு 4 அல்லது 5 நாட்கள் முன்பாக அறிவிக்க வேண்டும் என்றும் புதுக்கோட்டை பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள் இதற்கான கோரிக்கையை மத்திய ரயில்வே துறைக்கு முன்வைத்து பெற்றுத் தர வேண்டும் என்றும் அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments