மீமிசல் கடைவீதி , பேருந்து நிலையம் & கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்!
மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை பிரதான போக்குவரத்து சாலையாக இருந்து வருகிறது. மேலும் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், இராமேஸ்வரம் திருச்செந்தூர் போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் அடிக்கடி சென்று வருகின்றன. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித்திரிகின்றன.

நடவடிக்கை

இந்நிலையில், இப்பகுதியில் மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அப்போது மாடுகள் சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை ஊராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைக்கோடியாக முக்கிய ஊராக மீமிசல்  விளங்குகிறது.  வேலைக்காக  & பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு ஊர்களிலிருந்து நாள்தோறும் பொதுமக்கள் மீமிசல் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக இருசக்கர வாகனம், வேன்கள் மற்றும் பஸ்கள் மூலமாக  வந்து செல்கின்றனர். அதே போல பள்ளி, கல்லூரி வாகனங்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் வருவதால் மீமிசல் கடைவீதியில் எப்போதும் வாகனங்கள் நிறைந்து காணப்படுவது வழக்கம்.

கூட்டமாக திரியும் மாடுகள்

மாலை நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாடுகள் கூட்டமாக ரோட்டின் நடுவே நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊராட்சி சார்பில், ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த நாகப்பட்டினம்-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பல விபத்துக்கள் நடந்துள்ளது.  மேலும் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments