சுகாதார நடைபயிற்சி திட்டம் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்




புதுக்கோட்டையில் சுகாதார நடைபயிற்சி திட்டத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்.

சுகாதார நடைபயிற்சி

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ‘நடப்போம் நலம் பெறுவோம்' எனும் 8 கி.மீ. சுகாதார நடைபயிற்சி தொடக்க நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு நடைபயிற்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்தநிகழ்ச்சிக்கு கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலை வகித்தார்.

இத்திட்டத்திற்கான 8 கி.மீ. தூரம் கொண்ட பாதை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலிருந்து தொடங்கி விளையாட்டு மைதானத்தை ஒரு சுற்று வந்து மாலையீடு சென்று அதே வழியாக பால்பண்ணை ரவுண்டானா சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபயிற்சியினை நிறைவு செய்தனர். விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்கி நின்ற நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த வழியாக நடந்து சென்றனர்.

ஆரோக்கியத்தை மேம்படுத்தல்

மாலையீடு மற்றும் விளையாட்டு அரங்கில் 2 மருத்துவக்குழுக்களும், நடைபயிற்சி மேற்கொள்ளும் வழியில் 4 இடங்களில் குடிநீர் வசதியும், நடைபயிற்சி நிறைவடைந்தவுடன் பங்கேற்றவர்களுக்கு மூலிகை சூப் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டன. மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமை அனைத்து பொதுமக்களும் ஒருங்கிணைந்து இத்திட்டத்தில் பங்கேற்று இதனை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி அனைவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒன்றாக இணைவோம் என அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வக்கீல் செல்லபாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், சுகாதார துணை இயக்குனர்கள் ராம்கணேஷ் (புதுக்கோட்டை), நமச்சிவாயம் (அறந்தாங்கி), மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் ஷியாமளா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த நடைபயிற்சி நிகழ்ச்சி காணொலியில் ஒளிபரப்பப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments