மீண்டும் பள்ளிக்குப் போகலாம்.. புதுக்கோட்டை அருகே 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்த முன்னாள் மாணவர்கள்




புதுக்கோட்டை அருகே உள்ள புத்தாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 18 வருடங்களுக்குப் முன்னர் படித்த மாணவர்கள் தங்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்த நிகழ்ச்சி அனைவரையும் வியப்படையச் செய்தது.

புத்தாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2004 மற்றும் 2005-ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் ஒன்றிணைந்து தங்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களைச் சந்தித்துப் பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “வேரில் ஒன்று கூடும் விழுதுகள்” என்ற வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கி உள்ளனர்.


இதற்காகக் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இருந்து வாட்ஸ் ஆப் குழுவில் 110 மாணவர்களை இணைக்கும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். 18 வருடம் கழித்துச் சந்திக்கும் இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று (நவ.5) புத்தாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் நுழைவாயில் முன்பு 25க்கும் மேற்பட்ட முன்னாள் ஆசிரியர்களைப் பள்ளியில் தற்போது உள்ள ஆசிரியர்கள் வரவழைத்தனர். பின் முன்னாள் ஆசிரியர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


இதனைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சார்பில் சீர் தட்டு எடுத்து வந்தும், பட்டாசுகள் வெடித்தும், “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்ற பாடலை ஒலிபரப்பு செய்தும், கும்மி அடித்தும் உறவினர்களை அழைத்து வருவது போல ஓய்வு பெற்ற ஆசிரியர்களை அழைத்து வந்த நிகழ்வு அனைவரையும் வியப்படையச் செய்தது.18 வருடங்களுக்குப் பிறகு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தங்களிடம் படித்த மாணவர்களைக் காணும் போது கட்டி அரவணைத்து முத்தமழை பொழிந்து கண் கலங்கினர். முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து உற்சாகமாகக் கொண்டாடினர்.


இந்நிகழ்ச்சியின் முடிவில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்குத் தேவையான பீரோ, சேர் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன. அதன்பின், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டு, விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments