மாடு குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்: மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் சாவு சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த கோரிக்கை
காரைக்குடியில் மாடு குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் இறந்தார். சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கல்லூரி மாணவர் சாவு

காரைக்குடி குன்றக்குடி போலீஸ் சரகம் வீரியம்பட்டியை சேர்ந்தவர் எலிசபெத் ராணி. இவரது மகன் கெவின் ஜோஸ்வா (வயது 19). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர் மோட்டார் சைக்கிளில் காரைக்குடி சென்றார். அங்கு அவருக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். கோவிலூருக்கும் பாதரக்குடிக்கும் இடையே வந்த போது எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கெவின் ஜோஸ்வா பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியோடு அவர் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் கெவின் ஜோஸ்வா பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காரைக்குடி கோவிலூர் பகுதிகளில் கால்நடைகளால் இது போன்று அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும் அதனால் உயிர்ப்பலிகள் தொடர்வதும் வாடிக்கையாகி வருகிறது. இது கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட 2-வது மரணமாகும். கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்காமல் சாலைகளில் திரிய விடுவதே உயிர்ப்பலிகளை ஏற்படுத்துகிறது. இதற்கு காரணமான கால்நடைகளின் உரிமையாளர்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பயணிகளின் வேண்டுகோளாகும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments