தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு




தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

சிறப்பு பஸ்கள்

அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்தில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆண்டு தோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், இந்த ஆண்டும் நாளை (வியாழக்கிழமை) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவை பஸ்கள் (யூ.டி.) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (என்.எஸ்.எஸ்.) சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன.

ஆன்-லைன் முன்பதிவு

சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும்.

30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்பு பஸ்களுக்கு ஆன்-லைன் மூலமாக, www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூர்வ செயலி (ஆப்) ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பஸ்களின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 9445014452, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

நடை சாத்தப்படுவதால்...

சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2023 முதல் 30.12.2023 மாலை 5.00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2023 முதல் 29.12.2023 வரை இச்சிறப்புப் பஸ்கள் இயக்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments