கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்கள் ‘‘பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகளை கடன் வாங்காதீர்கள்'' உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்






பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகளை கடன் வாங்காதீர்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

குழந்தைகள் தின விழா

சென்னை கோட்டூர்புரத்தில் குழந்தைகள் தின விழா நடந்தது. இந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட 114 பள்ளிகளுக்கு கேடயங்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 180 மாணவ-மாணவிகளுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

கடன் வாங்காதீர்கள்

சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்படும் பள்ளிகள் விளையாட்டுத்துறையிலும் சிறந்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த 114 பள்ளிகளில் இருந்து விளையாட்டு வீரர்களும் கிடைக்க இருக்கிறார்கள். அதன் மூலமும் மகிழ்ச்சி அடைகிறேன்.

உடற்கல்வி பாடவேளைகளை கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்காதீர்கள். மாணவ-மாணவிகள் விளையாடுவதற்கு வாய்ப்பை கொடுங்கள். முடிந்தால், கணிதம், அறிவியல் பாடவேளைகளை உடற்கல்வி வகுப்புக்கு கடன் கொடுங்கள். கல்வி என்பது வெறும் பாடப்புத்தகத்தை மட்டும் படிப்பது அல்ல. புத்தகத்துக்கு வெளியிலும் கற்கவும், படிக்கவும் வேண்டியிருக்கிறது. அதற்கு உதாரணமாகதான் இப்போது பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றிருக்கிறீர்கள். உங்கள் திறமைக்கு என்னுடைய வாழ்த்துகள்.

தி.மு.க. அரசு துணை நிற்கும்

சமீபத்தில் வெற்றிகரமாக சென்ற சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள் தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் படித்தவர்கள். அவர்களை முதல்-அமைச்சர் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இதுபோல அரசு பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களும் சிறந்த சாதனையாளர்களாக வரவேண்டும். அதற்கு தி.மு.க. அரசும், முதல்-அமைச்சரும், பள்ளிக்கல்வித்துறையும் என்றென்றும் துணைநிற்கும்.

அமைச்சர் மீது பொறாமை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பார்க்கும்போது எங்களுக்கு பொறாமையாக இருக்கிறது.. அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத் துறை என்பதால், கோவில், கோவிலாக சுற்றுகிறார். நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பதால், ஸ்டேடியம் போன்ற இடங்களுக்கு செல்கிறேன். ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஒவ்வொரு மாதமும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார் (சிரித்தபடி). 3 மாதங்களுக்கு முன்பு துபாய், 2 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர், மலேசியா நேற்று ஜப்பானில் இருந்து வந்துள்ளார். அடுத்து எங்க போகப்போறாருனு தெரியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments