எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26-ந்தேதி தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடக்கம் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் முன்கூட்டியே நடக்கிறது
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 26-ந்தேதியும், பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதியும் நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அரசு பொதுத்தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கு மாணவ-மாணவிகள் முன்கூட்டியே தயாராகும் விதமாக, அதற்கான தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை, தேர்வு நடைபெறுவதற்கு 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பே வெளியிட்டு வருகிறது.

அதன்படி 2023-24-ம் கல்வியாண்டுக்கான அரசு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார்.

அப்போது அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா உள்பட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகள்...

இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2024) மார்ச் 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறைத்தேர்வு பிப்ரவரி 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. தேர்வு முடிவு மே 6-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 4-ந்தேதி ஆரம்பித்து, 25-ந்தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவு மே 14-ந்தேதி வெளியாகிறது.

எஸ்.எஸ்.எல்.சி.

எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வை பொறுத்தவரையில், மார்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இவர்களுக்கான செய்முறைத்தேர்வு பிப்ரவரி 23-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. தேர்வு முடிவு மே மாதம் 10-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு மேற்சொன்ன நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிடம் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், 5 நிமிடம் அவர்களுடைய சுயவிவரங்களை சரிபார்ப்பதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டு, அதன் பின்னர் 3 மணி நேரம் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

முன்கூட்டியே நடக்கும் தேர்வுகள்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதாலும், அதேபோல் நீட், ஜே.இ.இ., கிளாட் போன்ற நுழைவுத் தேர்வுகள் நடைபெற இருப்பதாலும் அதனால் பொதுத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறை ஆராய்ந்து, இந்த அட்டவணையை வெளியிட்டு இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச் மாதம் 2-வது வாரத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கும். அதன் பின்னர், ஏப்ரல் மாதம் முதல் அல்லது 2-வது வாரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஆரம்பிக்கும்.

ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அனைத்து தேர்வுகளும் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பே தொடங்கி நடத்தப்பட உள்ளது.

உதாரணமாக கடந்த கல்வியாண்டில் (2022-23) பிளஸ்-2 வகுப்புக்கு மார்ச் 13-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு மார்ச் 14-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு ஏப்ரல் 6-ந்தேதியும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஜாக்கிரதையுடன் நடவடிக்கைகள்

பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்ட பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதிக்குள் நடத்தப்படலாம் என்று தகவல் வந்ததன் அடிப்படையில், அதற்கேற்றபடி தற்போது பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதற்கு முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அப்போது அதற்கான முடிவு எடுக்கப்படும். மாணவர்களுக்கு நெருக்கடி இல்லாத வகையில், அவர்களுக்கு போதுமான நாட்கள் இடைவெளிவிட்டுதான் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. விடைத்தாள் திருத்தும் பணி, வினாத்தாளில் தவறுகள் போன்றவற்றில் எந்த குளறுபடிகளும் இல்லாதபடி தேர்வை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகள் மிகுந்த ஜாக்கிரதையுடன் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments