மழையால் தோட்டக்கலை பயிர்கள் சேதம்: விவசாயிகளுக்கு ரூ.97¾ லட்சம் நிவாரணம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தகவல்
மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் பெய்த மழையில் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்த நிலையில் விவசாயிகளுக்கு ரூ.97 லட்சத்து 79 ஆயிரத்து 595 நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மழை அளவு குறைவு

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர்.

இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் தனபதி பேசுகையில், மாவட்டத்தில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை அளவு 47 சதவீதம் குறைந்துள்ளதால் பாசன குளங்களில் தண்ணீர் இல்லாமல் உள்ளது. மழை குறைவதற்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டும். பதிவுத்துறையில் வழிகாட்டு மதிப்பீடு குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். இந்த ஆண்டு மழை குறைவால் சாகுபடி அடங்கல் முறையாக பதிவு செய்து பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றார்.

குண்டர் சட்டம்

சுப்பையா பேசுகையில், விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ள கூடாது. மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். புதுக்கோட்டை-சிவகங்கை மாவட்டத்தை இணைக்கும் இணைப்பு சாலையை அமைக்க வேண்டும்.

நடராஜன் பேசுகையில், விவசாயிகள் கொடுக்கும் மனுக்களுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அடுத்த கூட்டத்தில் விவசாயிகளின் மனுக்களுக்கு உரிய பதிலை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றார்.

மேட்டூர் அணை

கல்லணை கால்வாய் பாசனத்தாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ் பேசுகையில், கிராமங்களில் கலெக்டர் தங்கி மக்களிடம் குறைகளை கேட்க வேண்டும் எனும் திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 கன அடியாக உயரும் போது புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யூரியா உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். கல்லணை கால்வாய் பாசன பகுதியில் தண்ணீர் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றார்.

பவுன்ராஜ் பேசுகையில், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.195 வழங்க வேண்டும் என்றார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றுதல்

மிசா மாரிமுத்து ேபசுகையில், கவிநாடு கண்மாயில் வரத்து வாரி, பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றப்படுவதை தடுக்க வேண்டும் என்றார்.

இதேபோல விவசாயிகள் பலர் பேசினர். கூட்டத்தில் கலெக்டர் மெர்சிரம்யா பேசுகையில், மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கவிநாடு கண்மாயில் வரத்து வாரி, பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி அகற்றப்படும். வீடு இல்லாதவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விவசாயிகளுக்கு நிவாரணம்

முன்னதாக தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அழகுமலை பேசுகையில், "மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 7-ந் தேதி பெய்த மழையின் போது வாழை, முந்திரி, மா மரங்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் 1,698.425 ஏக்கர் பரப்பளவில் சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்ட 1,073 விவசாயிகளுக்கு ரூ.97 லட்சத்து 79 ஆயிரத்து 595 நிவாரணம் வந்துள்ளது. இந்த நிவாரண தொகை ஒரிரு நாட்களில் வழங்கப்படும்'' என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் தனலட்சுமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments