புதுக்கோட்டை மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1½ கோடி ஊக்கத்தொகை விரைவில் வினியோகம்




புதுக்கோட்டை மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1½ கோடி ஊக்கத்தொகை விரைவில் வினியோகிக்கப்பட உள்ளது.

கரும்பு விவசாயம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தா்வகோட்டை, ஆலங்குடி, புதுக்கோட்டை தாலுகா பகுதிகளில் கரும்பு விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இந்த கரும்புகள் அனைத்தும் சர்க்கரை ஆலைகளுக்கு விற்கப்படுகிறது. அங்கு கரும்பில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்புகள் அனைத்தும் தஞ்சாவூர் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அரசு சார்பில் வழங்கப்படுவது உண்டு. இதில் 2022-2023-ம் ஆண்டில் கரும்பு அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் ஊக்கத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் ஊக்கத்தொகை வழங்க கோரி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஊக்கத்தொகை

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், "கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,811 மத்திய அரசு கொள்முதல் விலை நிர்ணயித்துள்ளது. அந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை சர்க்கரை ஆலை கொள்முதல் செய்தது. கரும்பு உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதில் டன் ஒன்றுக்கு ஊக்கத்தொகை ரூ.195 வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படாமல் உள்ளது'' என்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.1 கோடியே 46 லட்சம் வழங்கப்பட உள்ளது. ஊக்கத்தொகை வழங்குவதற்கான கோப்புகளில் உயர் அதிகாரிகள் கையெழுத்திட்டு விட்டனர். விரைவில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments