17 நாட்களாக நடைபெற்ற மீட்புபணி வெற்றியுடன் நிறைவு! உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!!17 நாட்களாக நடைபெற்ற மீட்புபணி வெற்றியுடன் நிறைவு உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் 17 நாட்களாக சிக்கி இருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களது உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.கங்கோத்ரி-யமுனோத்ரி இடையே சார்தாம் புண்ணிய வழித்தட தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா-தண்டல்கான் இடையே சுமார் 4½ கி.மீ. தூரத்துக்கு மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த சுரங்கப்பாதை பணி நிறைவடைந்தால் 28 கிலோ மீட்டர் பயண தூரம் 4½ கி.மீ. தூரமாக குறையும். இதற்கான பணிகள் 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

41 தொழிலாளர்கள் சிக்கினர்

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அதிகாலை 5 மணி அளவில், சுரங்கத்தின் வெளிவாயில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் பாறைகள் இடிந்து விழுந்து மூடிக்கொண்டது.

அதனால் அப்போது பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்டனர்.

மீட்பு பணி தொடக்கம்

தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்த நிலையில், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட அரசுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் உடனடியாக மீட்பு பணியை தொடங்கி, இரவு-பகல் இடைவிடாது அதை தொடர்ந்தனர்.

அதேவேளையில், இடிபாடுகளுக்கு இடையே சிறிய குழாய் செலுத்தப்பட்டு அதன் மூலம், சிக்கிய தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன், உணவு, குடிநீர், மருந்துகள் வழங்கப்பட்டன. பின்னர் அவர்களின் தகவல் தொடர்புக்காக வாக்கி-டாக்கிகளும் உள்ளே அனுப்பப்பட்டன.

குழாய் வழியே அனுப்பப்பட்ட ‘எண்டோஸ்கோபிக் கேமரா’ மூலம் எடுக்கப்பட்ட வீடியோ பதிவும் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டதால், அவர்களின் நிலை குறித்து குடும்பத்தினருக்கு நிம்மதி பிறந்தது. தொழிலாளர்கள் பொழுதுபோக்க விளையாட்டு சாதனங்களும், வெளியே காத்திருக்கும் அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள தரைவழி தொலைபேசி வசதியும், செல்போன் வசதியும் ஏற்படுத்தப்பட்டன.

சிக்கிய அமெரிக்க எந்திரம்

ஆனால் மீட்பு பணி தொடர்ந்து தடங்கல்களையும், பிரச்சினைகளையும் சந்தித்தது. அதற்கு, துளையிடும் பிரமாண்ட எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளும், இடிபாடுகளுக்கு இடையே துளையிடும்போது இடையூறாக எதிர்ப்பட்ட உலோகத் துண்டுகள், பெரும் பாறைகள் போன்றவையும் காரணம்.

அதன் உச்சமாக, கடந்த வெள்ளிக்கிழமை அன்று இடிபாடுகளில் 47 மீட்டர் தூரத்தில், துளையிடும் அமெரிக்க ‘ஆகர்’ எந்திரத்தின் பிளேடுகள் உடைந்து சிக்கிக்கொண்டன. இதனால் துளையிடும் பணி முற்றிலுமாக நின்றுபோனது. ஐதராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பிளாஸ்மா கட்டர் மூலம், ‘ஆகர்’ எந்திர பிளேடுகள் வெட்டி அகற்றப்பட்டன.

ஆட்கள் மூலம்...

குகைக்குள் எந்திரம் மூலம் துளையிடுவது இயலாது போனதால், இடிபாடுகளுக்குள் செலுத்தப்பட்ட குழாய்களுக்குள் ஆட்களை அனுப்பி, மண்வெட்டிகளால் இடிபாடுகளை வெட்டி அகற்றும் நடவடிக்கை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. ‘எலி வளை தொழிலாளர்கள்’ எனப்படும், குறுகிய சுரங்கங்களை உருவாக்கும் அனுபவம் வாய்ந்த 12 தொழிலாளர்கள் இதில் இறக்கப்பட்டனர்.

சுரங்கப்பாதைக்கு மேலே செங்குத்தாக துளையிடும் பணியும் தொடங்கியது.

குகைக்குள் இடிபாடுகளுக்கு இடையே 57 மீட்டர் தூரத்துக்கு துளையிட வேண்டிய நிலையில், 52 மீட்டர் தூரம் வரை துளையிடப்பட்டு குழாய்கள் செலுத்தப்பட்டுவிட்டதாக உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி நேற்று அறிவித்தார். பின்னர் பிற்பகல் 2.30 மணி அளவில் அவர் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், குழாய்களை செலுத்தும் பணி முடிந்துவிட்டதாகவும், விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இடிபாடுகளுக்குள் செலுத்தப்பட்ட குழாய்களுக்குள் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சென்று தொழிலாளர்களை மீட்டு வருவார்கள் என்று தகவல் பரவியது.

பரபரப்பு

அதையடுத்து சுரங்கப்பாதை பகுதியில் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாம்களில் டாக்டர்கள் தயாராக இருந்தனர். உத்தர்காசி மாவட்டத்தில் சிலியாலிசார் நகரில் 41 படுக்கை சிறப்பு வார்டும் தயார்படுத்தப்பட்டது. ஆம்புலன்சுகள், ஹெலிகாப்டர் ஆகியவையும் தயார்நிலையில் இருந்தன.

ஆம்புலன்ஸ்கள் தடையின்றி விரைவாகச் செல்ல சாலைகளும் சீரமைக்கப்பட்டிருந்தன.

இதற்கிடையில், சுரங்கப்பாதை இடிபாடுகள் வழியாக தொழிலாளர்கள் மீட்கப்படுவது உறுதியானதால், செங்குத்தாக துளையிடும் பணி நிறுத்தப்பட்டது.

41 தொழிலாளர்களும் மீட்பு

இதற்கிடையே தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதிக்குள் குழாய் வழியாக சென்ற தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தொழிலாளர்களை அதன் வழியாகவே ஒருவர் பின் ஒருவராக இரவு 8 மணி அளவில் மீட்டுவரத்தொடங்கினர். அவர்கள், குழாய்க்குள், சக்கரங்கள் பொருத்திய ‘ஸ்டிரெச்சர்கள்’ மூலம் மீட்டுவரப்பட்டனர். தொடக்கமாக 5 பேர் மீட்கப்பட்டனர். விஜய் என்ற தொழிலாளர் முதலில் வெளியே வந்தார்.

வெளியே வந்த தொழிலாளர்கள், 2 வாரங்களுக்கு பின் முதல் முறையாக ‘சுதந்திர காற்றை’ சுவாசித்தனர். அவர்களை, சுரங்கப்பாதை பகுதியில் முகாமிட்டிருந்த முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, மத்திய மந்திரி வி.கே.சிங் ஆகியோர் அன்போடு நலம் விசாரித்தனர்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டதால் தொழிலாளர்கள் ஓரளவு ஆரோக்கியமாகவே காணப்பட்டனர். ஒருவர் பின் ஒருவராக 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சுரங்கப்பாதைக்கு வெளியே அவர்களை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்த குடும்பத்தினரும், உறவினர்களும் ஆனந்தக்கண்ணீர் விட்டனர்.

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சுரங்கப்பாதை பகுதியில் இருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் ஆம்புலன்சுகள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தொழிலாளர்கள் மீட்கப்பட்டதை தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு மூலம் அறிந்த, பல்வேறு மாநிலங்களில் உள்ள அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

அதில் உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியுடன் இணைந்தனர். தீபாவளி நாளன்று தொழிலாளர்கள் சிக்கியதால் அவர்களின் வீடுகளில் துக்கம் சூழ்ந்தது. ஆனால் தொழிலாளர்களின் ஊர்கள் அனைத்திலும் இப்போதுதான் நிஜமான தீபாவளி போல களைகட்டியது. தொழிலாளர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி, நாட்டின் 140 கோடி மக்களும் நேற்றுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments