புதுக்கோட்டையில் சிறுதானிய உணவு கண்காட்சி களைகட்டியது
புதுக்கோட்டையில் சிறு தானிய உணவு கண்காட்சி களைகட்டியது.

கண்காட்சி

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இக்கண்காட்சியில் சிறுதானிய உணவின் நன்மைகள், பலன்கள் குறித்த விவரங்களுடன் சிறிதானிய உணவுகளை தயார் செய்து உரிய குறிப்புகளுடன் காட்சிப்படுத்தியிருந்தனர். இதில் கேழ்வரகு, தினை, சாமை, கம்பு, கவுனி அரிசி உள்பட சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள், கஞ்சிகள், பாரம்பரியமான உணவுகள் வைக்கப்பட்டிருந்தன.

பள்ளி மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உணவுகளை தயாரித்து கொண்டு வந்திருந்தன. இந்த கண்காட்சியை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் தின்பண்டங்கள், உணவுகளை ருசி பார்த்தார். தயாரிப்பு முறைகளையும் அவர் கேட்டறிந்தார்.

களைகட்டியது

பாரம்பரியமான உணவுகள் மற்றும் தின்பண்டங்களை பார்வையிட மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் கண்காட்சி களை கட்டியது. கண்காட்சியில் இடம்பெற்றிருந்த உணவுகள், தின்பண்டங்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டன. இதனை அனைவரும் வாங்கி ஆர்வமுடன் சாப்பிட்டனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய கண்காட்சியில் பகல் 12 மணி அளவில் அனைத்து தின்பண்டங்களும் காலியாகிவிட்டன. கண்காட்சியில் சிறந்த அரங்குகளில் முதல் இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அதிகாரி புவனேஸ்வரி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments