குண்டும்,குழியுமான சாலையை சரி செய்ய வேண்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்த கோபாலப்பட்டிணம் சமூக ஆர்வலர்கள்!கோபாலப்பட்டிணத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சரி செய்ய வேண்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் ஆலமரம் ஈத்கா மைதானத்தில் இருந்து அரண்மனை தோப்பு வழியாக சுமார் 600 மீட்டர் தொலைவில் மீமிசல் செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக மாறியதால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் குழந்தைகள், பெரியவர்கள், ஊற்று பகுதியில் இருந்து குடிதண்ணீர் எடுத்து வருபவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் மிகுந்த சிரமத்துடன் இந்த பகுதியை கடந்து வருகின்றனர். குறிப்பாக மழை நேரத்தில் சொல்லவே வேண்டியதில்லை, இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்தநிலையில் இப்பகுதியில் வடிகால் சரியில்லாததாலும், சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக பல்லாங்குழி போல் இருப்பதால் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது. ஒரு சில சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.
ஈத்கா மைதானத்தில் இருந்து அரண்மனை தோப்பு வழியாக மீமிசல் செல்லும் இந்த தார்ச்சாலை சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. எனவே பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது இந்த சாலையானது மிகவும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இங்கு மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் பெருமளவு குளம் போல தேங்கி நிற்கின்றது.
இந்த சாலையானது மிகவும் போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த வழியாக தோப்பில் குடி தண்ணீர் எடுத்து வரக்கூடிய பெண்கள், வாகனத்தில் சென்று குடிதண்ணீர் எடுத்து வரக்கூடிய வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு வெளியூர் சென்று வரக்கூடிய மாணவர்கள், வேலைக்கு அலுவலகத்திற்கு செல்லக்கூடியவர்கள், பள்ளிக்கூட வேன்கள், மீமிசல் கடைத் தெருவிற்கு சென்று வரக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் இதை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுகள் உற்பத்தியாகி நோய்களை பரப்பும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
சாலையோரங்களில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். குண்டும், குழியுமான சாலையை போர்க்கால அடிப்படையில் கிராவல் கொண்டு செப்பனிட வேண்டும் எனவும், மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 28/11/2023 செவ்வாய்கிழமை கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.
சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments