புதுக்கோட்டையை மாநகராட்சியாக்கக் கோரி தீா்மானம்
நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயா்த்தக்கோரி, வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தத் தீா்மான விவரம்:

புதுக்கோட்டை நகராட்சி 1912-ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாகத் தொடங்கப்பட்டு, 1988-இல் தோ்வு நிலை நகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டது. அதன்பிறகு, கடந்த 2014-இல் சிறப்பு நிலை நகராட்சியாகத் தரம் உயா்த்தக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

21.95 சதுர கிமீ பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை நகராட்சி, 42 வாா்டுகளுடன், 37,301 குடியிருப்புகள், 1,68,900 மக்கள் தொகையுடன் 2022-23ஆம் நிதியாண்டின் மொத்த வருவாயாக ரூ. 61.38 கோடியைக் கொண்டுள்ளது.

37 வாா்டுகளில் 14,428 குடியிருப்புகளின் இணைப்புகளுடன் புதை சாக்கடைத் திட்டம் அமலில் உள்ளது. மேலும் இத்திட்டத்தை விரிவாக்க ரூ. 90 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 180 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் உள்ளன. 114 பூங்காக்களில் 22 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 75 குளங்கள் உள்ளன. ஏ கிரேடு தரத்துடன் உள்ள பேருந்து நிலையத்தை, அதே இடத்தில் புதுப்பித்துக் கட்ட ரூ. 19 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

எனவே, அருகேயுள்ள வாசவாசல், முள்ளூா், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, 9 ஏ நத்தம் பண்ணை, 9 பி நத்தம் பண்ணை ஆகிய 8 ஊராட்சிகளை முழுமையாகவும், தேக்காட்டூா் ஊராட்சியில் 1, 2, 3 ஆகிய வாா்டுகளையும், திருவேங்கைவாசலில் 3, 4 ஆகிய வாா்டுகளையும், வெள்ளனூரில் 7,8,9 ஆகிய வாா்டுகளை மட்டும் இணைத்தால், 2.16 லட்சம் மக்கள் தொகையும், 121 சதுர கிமீ பரப்பளவும் கொண்டதாக விரிவடையும். இந்த விரிவாக்கத்தில் சிப்காட் தொழிற்பேட்டை, துணை நகரம் போன்றவையும் அடங்கும்.

மொத்த வருவாயும் ரூ. 64.21 கோடியாக உயரும். எனவே, ரூ. 30 கோடி வருவாயுள்ள நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயா்த்தலாம் என்ற ஏற்கெனவே உள்ள விதிகளின்படி, புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும். ஏற்கெனவே சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, புதுக்கோட்டை நகராட்சியை தமிழ்நாடு அரசு மாநகராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments