புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் மூடி கிடக்கும் `ஒரு பொருள் தயாரிப்பு' விற்பனை கடை பலாப்பழத்தோடு முந்திரி பருப்பு விற்பனைக்கு அனுமதி கிடைக்குமா?
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஒரு பொருள் தயாரிப்பு விற்பனை கடை மூடியே கிடக்கிறது. பலாப்பழத்தோடு முந்திரி பருப்பு விற்பனைக்கு அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரபலமான பொருட்கள்

ரெயில் நிலையங்களில் அந்தந்த பகுதியில் பிரபலமான பொருட்களை விற்பனை செய்யும் வசதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. அதாவது ‘ஒரு ரெயில் நிலையம், ஒரு தயாரிப்பு' என்ற அடிப்படையில் ரெயில் நிலையத்தில் கடை அமைத்து பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகும். இதில் தமிழகத்தில் சில ரெயில் நிலையங்களில் அந்தந்த ஊர்களில் தயாரிக்கப்படும் அல்லது உற்பத்தியாகும் பிரபலமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் மதுரை கோட்ட ரெயில்வேக்குட்பட்ட புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பலாப்பழம் விற்பனை செய்யப்படுவதற்காக கடை அமைக்க வசதி ஏற்படுத்தப்பட்டது. இதில் முதலாவது நடைமேடையில் கடை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கடை திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது.

முந்திரி பருப்பு

இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறுகையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் பலாப்பழம் விளைச்சல் அதிகமாக காணப்படும். இதனால் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பலாப்பழத்தை பயணிகள் பெறும்படி இத்திட்டத்தில் கடை அமைக்க தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் பலாப்பழ சீசன் என்பது குறிப்பிட்ட காலம் மட்டும் தான். ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்கள் வரை பலாப்பழ விற்பனை காணப்படும். அதன்பின் விளைச்சல் இருக்காது. தற்போது பலாப்பழ சீசன் இல்லாததால் கடையை எடுத்து நடத்து யாரும் முன்வரவில்லை. இதனால் அப்படியே மூடிக்கிடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முந்திரி பருப்பும் புகழ்பெற்றவை. ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை பகுதிகளில் விளையும் முந்திரி பெயர் பெற்றவை. குடிசை தொழிலாக சாலையோரம் முந்திரி பருப்பினை விற்று வருகின்றனர். அதனால் பலாப்பழம் மட்டுமில்லாமல் முந்திரி பருப்பினையும் விற்க அனுமதித்தால் பயனுள்ளதாக இருக்கும். கடையை எடுத்து நடத்த வியாபாரிகளும் முன் வருவார்கள். உள்ளூர் பயணிகள் மட்டுமில்லாமல் வெளியூரை சேர்ந்த பயணிகளும் புதுக்கோட்டையின் சிறந்த உற்பத்தி பொருட்களை வாங்கி பயன்பெறுவார்கள்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments