கார்த்திகை மாத விரதம் எதிரொலி: வலையில் அதிகளவு மீன்கள் சிக்கியும் விலைபோகாததால் மீனவர்கள் கவலை 5 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்றும் பலனில்லை




5 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் அதிகளவுமீன்கள் சிக்கியும் விலைபோகாததால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

அதிகளவு மீன்கள் சிக்கின

வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக கடந்த 5 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லவில்லை. இந்நிலையில் புயல் கரையை கடந்ததையடுத்து தற்போது இயல்பு நிலை திரும்பியது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 5 நாட்களுக்கு பிறகு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் வழக்கம்போல் மீன்பிடித்துக்கொண்டு நேற்று கரை திரும்பினர். அப்போது மீனவர்கள் வலையில் நண்டு உள்ளிட்ட அதிக அளவு மீன்கள் சிக்கி இருந்தது. பிடித்துவரப்பட்ட மீன்களை ஏலம் விடுவதற்காக மீனவர்கள் கொண்டு வந்தனர். அப்போது கார்த்திகை மாதம் என்பதால் மீன்கள் குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

மீனவர்கள் கவலை

இதேபோல் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து அதிகரித்திருந்தது. கடந்த ஒரு வாரமாக மீன் வரத்து குறைந்த நிலையில் நேற்று மீன்வரத்து அதிகரித்திருந்தால் பொதுமக்களும், மீன் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கார்த்திகை மாதம் என்பதால் பெரும்பாலானோர் விரதம் இருப்பதால் போதுமான அளவில் விலை போகவில்லை. இதனால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments