கைரேகை வழங்க இயலாதவர்களுக்கு கருவிழி பதிவு மூலம் ஆதார் வழங்கலாம் மத்திய அரசு விளக்கம்




கைரேகை வழங்க இயலாதவர்களுக்கு கருவிழி பதிவு மூலம் ஆதார் வழங்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

கேரள பெண்ணுக்கு ஆதார்

ஆதார் அட்டை பெறுவதற்காக பதிவு செய்பவர்களுக்கு கைவிரல் ரேகை மற்றும் கருவிழி பதிவு போன்றவை பெறப்படுகிறது.

ஆனால் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கைவிரல்கள் இல்லாததால் அவருக்கு ஆதார் கார்டு வழங்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து மத்திய தகவல் தொழில்நுட்ப இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அந்த பெண்ணின் கருவிழி பதிவு மட்டும் பெற்றுக்கொண்டு ஆதார் கார்டு வழங்க நடவடிக்கை எடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஆதார் ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகள் அந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று ஆதார் எண்ணை வழங்கினர்.

வழிகாட்டுதல் வெளியீடு

இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து ஆதார் பதிவு மையங்களுக்கு இது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்ட இருப்பதாவது:-

ஆதார் அட்டை பெறுவதற்கு தகுதி வாய்ந்த ஒருவர் கைரேகை வழங்குவதற்கு இயலாவிட்டால், அவரது கருவிழியை பதிவு செய்து கொண்டு ஆதார் அட்டை வழங்கப்பட வேண்டும்.

இதைப்போல கருவிழி பதிவு வழங்க முடியாதவருக்கு கைவிரல் ரேகையை பதிவு செய்து கொண்டு ஆதார் வழங்கலாம்.

சரிபார்க்க வேண்டும்

அதேநேரம் ஏதாவது காரணத்தால் இந்த இரண்டையும் வழங்க முடியாதவர்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட வேண்டும்.

விரல் ரேகை மற்றும் கருவிழி பதிவு இரண்டையும் வழங்க முடியாத நபரின் பெயர், பாலினம், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

விரல்கள் அல்லது கருவிழி அல்லது இரண்டும் கிடைக்காததை முன்னிலைப்படுத்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் புகைப்படம் எடுக்கப்பட்டு, ஆதார் பதிவு மையத்தின் மேற்பார்வையாளர் அத்தகைய பதிவை சரிபார்க்க வேண்டும்.

29 லட்சம் பேருக்கு ஆதார்

தேவையான தகவல்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஒவ்வொரு தகுதியான நபருக்கும் பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி பதிவு) வழங்க இயலாமையைப் பொருட்படுத்தாமல், ஆதார் எண் வழங்கலாம்.

ஆதார் ஆணையம் ஒவ்வொரு நாளும் சுமார் 1,000 பேரை மேற்கூறிய விதிவிலக்கான பதிவுகளின் கீழ் பதிவு செய்கிறது.

அந்தவகையில் விரல்கள் இல்லாமை அல்லது ரேகை வழங்க இயலாமை மற்றும் கருவிழி இல்லாமை அல்லது 2 வழிகளும் இல்லாதவர்கள் என சுமார் 29 லட்சம் பேருக்கு இதுவரை ஆதார் எண்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு மத்திய அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments