புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் பணிக்கான தேர்வை 4 ஆயிரத்து 582 பேர் எழுதினர்




புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் பணிக்கான தேர்வை 4 ஆயிரத்து 582 பேர் எழுதினர்.

எழுத்து தேர்வு

தமிழக காவல்துறையில் 2023-ம் ஆண்டிற்கு மாநிலம் முழுவதும் 3,359 இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 4 ஆயிரத்து 43 ஆண்களும், ஆயிரத்து 804 பெண்களும் என மொத்தம் 5 ஆயிரத்து 847 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த தேர்வுக்காக புதுக்கோட்டை மாலையீட்டில் மவுண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி, லேணா விளக்கு மவுண்ட் சீயோன் சி.பி.எஸ்.இ. பள்ளி, சிவபுரம் ஜே.ஜே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசம்பட்டி சண்முகநாதன் என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இத்தேர்வை எழுத தேர்வர்கள் நேற்று காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்தனர்.

905 பேர் எழுத வரவில்லை

தேர்வு மையத்திற்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், புளுடூத், ஹெட்போன், பென்டிரைவ், கால்குலேட்டர், பென்சில், ரப்பர் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தேர்வர்கள் கொண்டு வந்த செல்போன் மற்றும் அவர்கள் அணிந்திருந்த கைக்கடிகாரம் ஆகியவற்றை நுழைவுவாயிலேயே போலீசார் வாங்கி டோக்கன் அடிப்படையில் வரிசையாக வைத்தனர்.

மேலும் அவர்கள் கொண்டு வந்த பைகளையும் வாங்கி தனியாக டோக்கன் வழங்கி வைத்தனர். தேர்வர்களை பலத்த சோதனைக்கு பின் தேர்வு மையத்திற்குள் போலீசார் அனுமதித்தனர். மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 4 ஆயிரத்து 582 பேர் எழுதினர். 905 பேர் தேர்வு எழுத வரவில்லை.

டி.ஐ.ஜி. ஆய்வு

தேர்வு நடைபெற்றதை திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவன் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவும் பார்வையிட்டார். தேர்வர்களுக்கு வசதியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments