மழை காரணமாக தள்ளிவைப்பு: பள்ளி அரையாண்டு தேர்வு புதிய அட்டவணை வெளியீடு 13-ந்தேதி தொடங்கி 22-ந்தேதியுடன் முடிகிறது




மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு வருகிற 13-ந்தேதி தொடங்கி 22-ந்தேதியுடன் முடிகிறது. இதுதொடர்பான புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

அரையாண்டு தேர்வு

`மிக்ஜம்' புயல் மழை பாதிப்பால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான பள்ளிகளில் தண்ணீர் சூழ்ந்தன. அதிலும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையும், மற்ற 2 மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதி பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டது.

இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து அதற்கேற்றாற்போல் பணிகள் நடந்து வந்தன. அதன்படி, கடந்த 7-ந்தேதி முதல் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கு அரையாண்டு தேர்வு தொடங்கி நடைபெற இருந்த நிலையில், இந்த மழை பாதிப்பால், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

2-வது முறையாக மாற்றம்

இதனால் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு 7, 8-ந்தேதிகளில் நடத்தப்பட இருந்த தேர்வை மற்றொரு தேதிக்கும், மற்ற மாணவர்களுக்கு ஏற்கனவே குறிப்பிட்டு இருந்த தேதியிலும் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி பணிகளும் நடந்து வந்த நிலையில், தற்போது 2-வது முறையாக மீண்டும் அரையாண்டு தேர்வுக்கான தேதியை மாற்றம் செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘11-ந்தேதியன்று (இன்று) அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில்கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் நாளை (இன்று) தொடங்கவிருக்கும் தேர்வுகளை 13-ந்தேதி (புதன்கிழமை) முதல் தொடங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித் துறையால் அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை வெளியிடப்படும்' என்று கூறியிருந்தார்.

புதிய அட்டவணை

முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பள்ளிக்கல்வித் துறை நேற்று புதிய அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 13-ந்தேதி தேர்வு தொடங்கி 22-ந்தேதியுடன் (வெள்ளிக்கிழமை) தேர்வு நிறைவு பெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இடையில், 16 (சனிக்கிழமை), 17 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 19 (செவ்வாய்க்கிழமை) -ந்தேதிகளை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் 19-ந்தேதியன்று 1 முதல் 3-ம் வகுப்புக்கு மட்டும் ஆங்கில பாடத்துக்கான தேர்வு நடத்தப்படுகிறது.

விடுமுறை

1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரையிலும், பிளஸ்-2 வகுப்புக்கு பிற்பகல் 1.15 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு முடிந்ததும், 23-ந்தேதியில் (சனிக்கிழமை) இருந்து, அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1-ந்தேதி (திங்கட்கிழமை) வரை அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை விடப்பட்டு, 2-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments