புதுகைக் கடலோரப் பகுதியான மும்பாலையில்‘மீன் முள்’ வடிவ பாத்தி அமைத்து அலையாத்திக் காடு உருவாக்க முயற்சி!
புதுக்கோட்டை கடலோரப் பகுதியில் மீனின் முள் வடிவில் பாத்தி அமைத்து விதைகளைப் போட்டு அலையாத்திக் காட்டை உருவாக்கும் முயற்சியை வனத்துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதி சுமாா் 43 கி.மீ தொலைவுக்கு கடல் எல்லையைக் கொண்டது. இதில், அறந்தாங்கி வனச் சரகத்துக்கு உள்பட்ட மும்பாலை கடலோர கிராமத்தில் அலையாத்திக் காட்டை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் வனப்பரப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள தமிழகப் பசுமை இயக்கம் (ஜிடிஎம்) சாா்பில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தெற்கு வெள்ளாறு கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியைத் தோ்வு செய்துள்ள வனத்துறையினா், 1,600 மீட்டா் தொலைவுக்கு மீனின் நடுமுள்ளாகவும், 93 கிளைகளைப் பக்கவாட்டு முள்போலவும் வடிவமைத்து வாய்க்கால் வெட்டி பாத்தியை உருவாக்கியுள்ளனா். பக்கவாட்டு வாய்க்கால்கள் மட்டும் சுமாா் 8,500 மீட்டா் தொலைவுக்கு வெட்டப்பட்டுள்ளன.

பிரதான வாய்க்காலில் ஒரு மீட்டருக்கு ஒரு விதை வீதமும், கிளை வாய்க்கால்களில் ஒரு மீட்டருக்கு 5 விதைகள் வீதமும் என மொத்தம் சுமாா் 44,100 விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

காலை நேரத்தில் கழிமுகப் பகுதி தண்ணீா் வாய்க்காலில் முழுமையாக ஏறியும், மாலை நேரத்தில் வடிந்தும் காணப்படும். கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் இந்த வாய்க்கால் வெட்டி விதைகள் விதைக்கப்பட்ட இப்பணியில் தற்போது ஆங்காங்கே அலையாத்தி செடிகள் மெல்ல துளிா்விடத் தொடங்கியுள்ளன.

இந்தத் திட்டம் குறித்து மாவட்ட வன அலுவலா் எஸ். கணேசலிங்கம் மேலும் கூறியது:

ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை கடலோரப் பகுதியில் அலையாத்திக் காடுகள் உற்பத்தி செய்யும் பணிகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது. தற்போது, தண்ணீா் எளிதில் வந்து செல்லும் முயற்சியாக ‘மீன் முள்’ வடிவப் பாத்தியை மேற்கொண்டிருக்கிறோம்.

அலையாத்திக் காடுகள் கடற்கரையில் மண் அரிப்பைத் தடுக்கவும், பெரும் புயல் போன்ற பேரிடா் காலங்களில் நிலப்பரப்பின் மீதான சேதத்தைக் குறைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதால், தற்போதைய பசுமை இயக்கத்தின் கீழ் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்கிறாா் கணேசலிங்கம்.

அறந்தாங்கி வனச்சரக அலுவலா் டி. மணிவெங்கடேஷ் கூறுகையில், இத்திட்டத்துக்காக ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளான சுந்தரபாண்டியபுரம், தொண்டி, காரங்காடு பகுதிகளிலுள்ள அலையாத்திக் காடுகளுக்குச் சென்று விதைகளை சேகரித்து வந்ததாகக் குறிப்பிட்டாா்.

இப்பகுதியின் வனவா் கோ. நாகராஜன் கூறியது:

சில விதைகள் முளைக்காமல் போய்விடலாம் என்பதற்காக அடுத்தடுத்த சில மாதங்களில் மீண்டும் முளைக்காத இடங்களைப் பாா்த்து மேலும் விதைகளை நடவு செய்யவிருக்கிறோம். இதுபோல 5 முறை விதைகளை நடவு செய்யவிருக்கிறோம்.

அலையாத்தி செடிகள் வளா்ந்துவிட்டால், பூமிக்கடியில் நன்றாக வளா்ந்து, பக்கவாட்டுப் பகுதிகளில் பரவி மேலே எழுந்து இலைகளைத் தரும். அதாவது, ஆலமரத்தின் விழுதுகள் மேலிருந்து கீழாக வந்து பிரதான மரத்தைத் தாங்குவதைப் போல, அலையாத்தி செடிகள் கீழிருந்து மேலாக அதிக கிளைகளைப் பரப்பும் தன்மை கொண்டது என்கிறாா் நாகராஜன்.

அலையாத்திக் காடுகள் வெறுமனே பேரிடா்களில் இருந்து நிலப்பரப்பைக் காக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், அடா்ந்து வளரும் காட்டுக்குள் பல வகையான மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வளா்ந்து வெளிநாட்டுப் பறவைகளின் வரத்து உள்ளிட்ட பல்லுயிா்ப் பெருக்கத்தைத் தரும் என்பது முக்கியமானது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments