திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நடப்பு நிதியாண்டில் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.527 கோடி வருவாய் ஆலோசனை கூட்டத்தில் தகவல்




திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நடப்பு நிதியாண்டில் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.527 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மூத்த ரெயில்வே அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு வகையான பொருட்களை சரக்கு ரெயில்களில் ஏற்றி அனுப்பும் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரூ.527 கோடி வருவாய்

திருச்சி கோட்ட மூத்த வணிக மேலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று, சரக்கு போக்குவரத்து மூலம் திருச்சி ரெயில்வே கோட்டத்தின் வளர்ச்சி மற்றும் வருவாய் உள்ளிட்ட விவரங்களை ஒளித்திரை காட்சி மூலம் விளக்கி கூறினார். மேலும், திருச்சி ரெயில்வே கோட்டத்தில் சரக்கு ரெயில்களில் நிலக்கரி, சிமெண்டு, உணவு தானியங்கள், உரம், இரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் 9.212 மில்லியன் டன் அளவுக்கு கையாளப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ரூ.527 கோடியே 13 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு

இதனை தொடர்ந்து கோட்ட மேலாளர் அன்பழகன் பேசும்போது, திருச்சி ரெயில்வே கோட்டம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்க முனைப்பு காட்டி வருகிறது. நடப்பு நிதியாண்டில் எஞ்சியுள்ள காலங்களில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் அதிகப்படியான சரக்குகளை கையாள்வதற்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments