பட்டுக்கோட்டை அருகே இலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த 6 பேர் கைது போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது
பட்டுக்கோட்டை அருகே இலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ரகசிய தகவல்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சேதுபாவாசத்திரம் பகுதியில் இலங்கை தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் போலி பாஸ்போர்ட் தயாரித்து வழங்குவதாக தஞ்சை குற்ற புலனாய்வுத்துறை (கியூ பிரிவு) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கியூ பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலி பாஸ்போர்ட்

அதன்படி பட்டுக்கோட்டை ரெயில் நிலையம் அருகே குற்ற புலனாய்வுத்துறை போலீசார் மற்றும் தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஆண்டிக்காடு கிராமத்தில் தபால்காரராக பணியாற்றிய கோவிந்தராஜ்(வயது 64), கும்பகோணம் மேல வடக்கு தெரு பகுதியை சேர்ந்த வடிவேல் மற்றும் ராஜாமடம் பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சங்கர் ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களிடம் போலி பாஸ்போர்ட் இருந்தது தெரிய வந்தது.

6 பேர் கைது

பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போலி பாஸ்போர்ட் தயாரித்து தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களிடம் கொடுத்தது தெரிய வந்தது.

மேலும் இதில் திருச்சி உறையூரை சேர்ந்த இலங்கை தமிழரான சுந்தர்ராஜ், கும்பகோணம் மகாமககுளம் பகுதியை சேர்ந்த ராஜு, சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தபால்காரர் பக்ருதீன், சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்த பாலசிங்கம்(32), திருச்சி கல்கண்டார்கோட்டையை சேர்ந்த வைத்தியநாதன்(52) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜ், வடிவேல், சங்கர், பாலசிங்கம், ராஜு, வைத்தியநாதன் ஆகிய 6 பேரையும் கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்யா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

மேலும் 2 பேருக்கு வலைவீச்சு

அவர்கள் 6 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 6 பேரையும் போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச்சென்று அங்கு அடைத்தனர்.

மேலும் இது தொடர்பாக இலங்கை தமிழரான சுந்தர்ராஜ், சேதுபாவாசத்திரம் பக்ருதீன் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

திடுக்கிடும் தகவல்கள் வெளியானது

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு போலியாக ஆவணங்கள் தயாரித்து அதன் மூலம் விண்ணப்பித்தும், உரிய போலீஸ் விசாரணை ஏதும் நடத்தாமல் அதற்கு ஒப்புதல் வழங்கியும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள சிலரின் துணையோடு பாஸ்போர்ட் வழங்கியும், சிலருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து வழங்கி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதுவரை 28 பாஸ்போர்ட்டுகளை தயாரித்து வினியோகம் செய்துள்ளனர். இந்த பாஸ்போர்ட் மூலம் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். இதற்காக பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெற்று வந்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments