மும்பாலை கடற்கரை பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் அலையாத்தி காடுகள் உருவாகிறது




மும்பாலை கடற்கரை பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் அலையாத்தி காடுகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அலையாத்தி காடுகள்

கடல் அலைகளை கட்டுப்படுத்த அலையாத்தி காடுகள் உதவுகின்றன. ஆற்று நீர், கால்வாய் நீர் கடலோடு கலக்கும் இடங்களில் வளரும் இயற்கை அரண்கள் அலையாத்தி காடுகள் என அழைக்கப்படுகிறது. புயல், வெள்ளம், மண் அரிப்பு, கடல்நீர் பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து மனிதர்களை பாதுகாப்பதில் அலையாத்தி காடுகளின் பங்கு அதிகமாக உள்ளது. மேலும் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பதோடு, மீன்வளத்தை அதிகரிப்பதிலும் அலையாத்தி காடுகள் முக்கிய பங்காற்றுகின்றன.

இதனை சதுப்பு நில காடுகள் என அழைப்பதும் உண்டு. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதி சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளது. இதில் கடற்கரையோர பகுதிகளில் சில இடங்களில் அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன. முத்துக்குடா பகுதியில் சுற்றுலா தலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

50 ஏக்கர் பரப்பளவு

இந்த நிலையில் பசுமை தமிழகம் திட்டத்தில் மாவட்டத்தில் தெற்கு வெள்ளாறு கடலோடு கலக்கும், மணமேல்குடி அருகே மும்பாலை கடற்கரை பகுதியில் அலையாத்தி காடுகள் உருவாக்க வனத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். கடற்கரை பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அலையாத்தி காடுகளுக்கான தாவரங்கள் வளர்வதற்காக விதைகள் விதைக்க வாய்க்கால் வெட்டி பாத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காடுகள் மீன் முள் வடிவில் அமைகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது கூறுகையில், "மீன் முள் போன்று அமைப்பதன் மூலம் மரங்களுக்கிடையே சீரான இடைவெளி இருக்கும். இதனால் கடல் நீர் அலை உள்ளேயும், வெளியேயும் சென்றுவரும் வகையில் இருக்கும். இதேபோல ஆற்று நீரும் கடல் நீரோடு கலக்கும் வகையிலும் அமையும். இந்த காடுகள் மீன் உள்பட கடல் வாழ் உயிரினத்தை பெருக்க பயனாக அமையும். மேலும் கடல் நீர் பெருக்கெடுத்து கரைக்கு வர வாய்ப்புகள் குறையும். பறவையினங்கள் வந்து தங்கவும் வசதியாக இருக்கும். வெளிநாட்டு பறவைகள் வர வாய்ப்பு உள்ளது'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments