தண்டவாளம் அரிப்பால் நடுவழியில் நிறுத்தப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிக்கி பரிதவித்த 509 பயணிகள் பத்திரமாக மீட்பு சென்னைக்கு ரெயிலில் அனுப்ப ஏற்பாடு


கடும் மழையால் தண்டவாளம் அரிப்பால் நடுவழியில் நிறுத்தப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பரிதவித்த 509 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியது

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை மக்களை புரட்டி போட்டது. இந்த மழையால் வெள்ளம் புகுந்து மக்களை அச்சுறுத்தியதோடு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

2 மாவட்டங்களில் உள்ள ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் சரளை கற்களை வெள்ள நீர் அடித்து சென்றது. எனவே, ரெயில் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கி ஆறாக ஓடியது.

ரெயில் தண்டவாள பாதிப்பின் உச்சமாக கடந்த 17-ந் தேதி ஸ்ரீவைகுண்டம்-செய்துங்கநல்லூர் ரெயில் பாதையில் அரிப்பு தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியது.

ரெயில் பயணிகள் 300 பேர் மீட்பு

இதற்கிடையே அன்றை தினம் இரவு 8.25 மணிக்கு புறப்பட்ட திருச்செந்தூர்-சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் 33 கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இரவு 9.19 மணிக்கு நிறுத்தப்பட்டது. இந்த ரெயிலில் சுமார் 800 பயணிகள் பயணித்தனர்.

அதே சமயத்தில் ரெயில் நிலையத்தை சுற்றி நாலாபுறமும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. இதனால் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிகாரிகள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்றுமுன்தினம் அதிகாலை வரை 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பஸ்கள் மற்றும் 2 வேன்கள் மூலம் அழைத்துச் சென்று அருகில் உள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

திக்...திக்...மனநிலையில்...

இந்த மீட்புக்கு பிறகு வழியில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டதாலும், தொடர்ந்து கனமழை பெய்ததாலும் அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. எனவே மீதமுள்ள 509 பயணிகளை மீட்க முடியாதநிலை ஏற்பட்டது. அந்த பகுதியே தீவு போல் மாறியது. இதனால் அடுத்து என்ன நடக்குமோ? என்ற திக்...திக்... மனநிலையில் ரெயில் பயணிகள் அச்சத்தில் இருந்தனர். 24 மணி நேரத்தையும் கடந்ததால் செல்போனில் சார்ஜ் காலியாகி வெளி உலக தொடர்பில்லாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்கிடையே ஹெலிகாப்டர் மூலம் பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே நேற்று காலை தேசிய பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த 15 பேர் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தை சென்றடைந்தனர். முதல் குழுவினர் காலை 9 மணிக்கும், 2-வது குழுவினர் காலை 11 மணிக்கும் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

ஹெலிகாப்டரில் உணவு பொட்டலம்

மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழு ஹெலிகாப்டர், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உள்பட 3 ஹெலிகாப்டர்களில் ரெயிலில் இருந்த பயணிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இந்த உணவு பொட்டலங்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளுக்கு வினியோகித்தனர்.

இதில் சாதம், ரொட்டி, ஊறுகாய், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அதன் பிறகு மதியம் 1 மணிக்கு ரெயிலில் இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேற்றும் பணி நடந்தது.

படிப்படியாக அனைவரும் மீட்பு

முதல் கட்டமாக 100 பயணிகள் ரெயிலில் இருந்து இறக்கப்பட்டு சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளூர் என்ற பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த வழியில் சுமார் ஒரு அடி அளவுக்கு மட்டுமே தண்ணீர் தேங்கியிருந்தது. அந்த தண்ணீரில் ரெயில் பயணிகள் நடந்து சென்றனர். அப்போது தான் அவர்கள் வெளிஉலக தொடர்பை கிடைத்த சந்தோசத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினர். இதேபோல் படிப்படியாக அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டனர்.

இதற்கிடையே ஏற்கனவே 13 பஸ்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பிறகு 509 பயணிகளும் அந்த பஸ்கள் மூலம் 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கிருந்து 18 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு நடந்தது.

மீட்கப்பட்ட பயணிகளில் 539 பேர் மட்டும் சென்னைக்கு செல்ல தயாரானார்கள். மற்ற 270 பேர் அவர்களின் ஊருக்கே திரும்பி சென்று விட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments