மீனவர்கள் 7-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை வாழ்வாதாரம் பாதிப்பால் அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை
7-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிவாரணம் வழங்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்கள் ஓய்வு

வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. பலத்த மழை மற்றும் கடல் சீற்றம், அதிக காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் மீன்பிடி இறங்கு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மீனவர்களும் ஓய்வெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 7-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

வர்த்தகம் பாதிப்பு

கடலில் மீன்பிடிக்க கூடிய சாதகமான சூழல் இருந்தால் மட்டுமே வானிலை மைய அறிவிப்பின் படி மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படும். இந்த நிலையில் மழை தொடர்பாக தொடர்ந்து அறிவிப்பு இருந்து வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை அவர்கள் கடலுக்கு செல்ல முடியாது. இந்த நிலையில் கடந்த 7 நாட்களாக மீன்பிடிக்க செல்லாததால் பல கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. மேலும் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

பொதுவாக மீன்பிடி தொழிலை நம்பி கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். ஒரு படகில் மீன்பிடிக்க செல்லும் போது குறைந்தது 4 மீனவர்கள் உடன் செல்வார்கள். அவர்களுக்கு கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். அந்த வருமானம் தான் அவர்களுக்கு வாழ்வாதாரம்.

நிவாரணம் வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் வாரத்தில் திங்கட்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய 3 நாட்களில் மட்டுமே மீன்பிடிக்க செல்வது வழக்கம். ஒரு நாள் சென்று மறுநாள் திரும்பி வருவார்கள். அதற்கு மறுநாள் ஓய்வெடுப்பார்கள். இந்த நிலையில் சமீபத்தில் மிக்ஜம் புயல் மற்றும் தற்போதைய எச்சரிக்கையால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் அவர்களது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதால் அரசு தரப்பில் இருந்து நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கோட்டைப்பட்டினம் மீனவர்கள் சங்க தலைவர் அசைன் மொகைதீன் கூறுகையில், ‘‘கடந்த 7 நாட்களாக மீன் பிடிக்க செல்லாததால் பல கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிப்படைந்திருக்கிறது. நமது கடல் பகுதியில் இறால் அதிகமாக பிடிபடும். இதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது உண்டு. தற்போது மீன்பிடிக்க செல்லாததால் பாதிப்பு தான். இயற்கை பேரிடர் காலங்களில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. வெள்ள, புயல் காலங்களில் மற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதை போல மீனவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments