சேலம் மாவட்டத்தில் திட்டப்பணிகளில் முறைகேடு: 2 ஊராட்சி தலைவிகள் பதவி நீக்கம் கலெக்டர் கார்மேகம் உத்தரவு




திட்டப்பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 ஊராட்சி மன்ற தலைவிகளை பதவி நீக்கம் செய்து சேலம்  மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

தேவியாக்குறிச்சி ஊராட்சி

சேலம் மாவட்டத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவிகளை பதவி நீக்கம் செய்து கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக தமிழக அரசிதழில் வெளியாகி உள்ள விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவியாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவியாக அமுதா பதவி வகித்து வந்தார். இவர் ஊராட்சியில் தவறான தீர்மானம் நிறைவேற்றி, வேலை உத்தரவு வழங்காமல் 3 பணிகளை ஒப்பந்ததாரர் மேற்கொள்ள அனுமதித்து உள்ளார். அவரது கணவரை ஊராட்சி செயல்பாடுகளில் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது மற்றும் அவரும், ஊராட்சி செயலாளரும் சேர்ந்து ஒப்பந்ததாரரிடம் திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டதற்காக பட்டியல் தொகை வழங்க லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 2 பேர் மீதும் குற்ற வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

அமுதா தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவியாக செயல்பட்டால் அதிகார துஷ்பிரயோகம் செய்வார். எனவே ஊராட்சி நிர்வாக நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி தேவியாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவி அமுதா, ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்.

பைத்தூர் ஊராட்சி

இதே போன்று ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவியாக கலைச்செல்வி பதவி வகித்து வந்தார். இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கல்கரை, மண்கரை அமைக்கும் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் 3 லட்சம் ரூபாய் முறைகேடு செய்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இது குறித்த விசாரணைக்கு ஆஜராகவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களின் அடிப்படை உரிமையான வேலை அட்டைகளை அவர்களிடம் அளிக்காமல், தன் வசம் வைத்து உள்ளார். இவர் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவியாக செயல்பட்டால் அதிகார துஷ்பிரயோகம் செய்வார். எனவே ஊராட்சி நிர்வாக நலனை கருத்தில் கொண்டு பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவி கலைச்செல்வி, பதவி நீக்கம் செய்யப்படுகிறார்.

இவ்வாறு தமிழக அரசிதழில் கூறப்பட்டு உள்ளது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments