பிரதமரின் நிதியுதவி திட்டம்: ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்




பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊக்கத்தொகை

பிரதமரின் நிதியுதவி (பி.எம். கிசான்) திட்டத்தின் கீழ் விவசாயிகள் இடுபொருட்கள் வாங்க 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தில் 15 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 15-வது தவணை தொகை நிபந்தனைகளை பூர்த்தி செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. வரவு வைக்கப்படாத விவசாயிகள் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்த விவசாயிகள் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் (www.pmkisan.gov.in) ஆதார் எண் விவரங்கள் குறித்து ரகசிய குறியீட்டு எண் மூலம் சரிபார்க்கலாம்.

வங்கி கணக்கு எண்

ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகே உள்ள இ-சேவை மையத்தை அணுகி பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் ஆதார் எண் விவரம் மற்றும் விரல் கைரேகையை பதிவு செய்து சரிபார்க்கலாம் அல்லது பி.எம்.கிசான் செயலி மூலமாக முக அடையாளம் கொண்டு ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம். விவசாயிகள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேலும் நேரடி பணபரிவர்த்தனை முறைக்கு வங்கி கணக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியாத விவசாயிகள் அருகே உள்ள தபால் நிலையத்திற்கு சென்று புதிய சேமிப்பு கணக்கினை தொடங்கி பயன்பெறலாம்.

விவசாயிகள் பதிவு செய்யலாம்

மேற்கூறிய நிபந்தனைகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக மத்திய அரசு கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 15-ந் தேதி வரை பி.எம்.கிசான் செறிவூட்டல் முனைப்பு இயக்கத்தை தொடங்கி கிராமங்கள் தோறும் ஒரு கிராம பொறுப்பு அலுவலரை நியமித்துள்ளது. விவசாயிகள், பொறுப்பு அலுவலர்களை அணுகி தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் திட்டத்தில் இன்னும் இணையாத விவசாயிகள் புதிதாக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

விவசாயிகள் தங்கள் கிராமத்தின் பொறுப்பு அலுவலரை தெரிந்து கொள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளவும். தகுதியான விவசாயிகள் சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலரை அணுகி, தவணை தொகை ஏன் வரவு வைக்கப்படவில்லை என்ற காரணத்தை அறிந்து கொண்டு, குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments